மா.ச. மதிவாணன்.
அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சி தொண்டர்கள் இன்று (அக்டோபர் 17) கோலாகலமாக கொண்டாடுகின்றனர். நடிகர்கள் திடீரென இன்று கட்சியை தொடங்கியதுபோல, அன்று எம்ஜிஆர் ஓரிரவில் அதிமுகவை தொடங்கிவிடவில்லை.
அதிமுக எனும் கட்சி உருவானதன் பின்னணியில் எத்தனை எத்தனை பிரளயங்கள்… அரசியல் சரித்திரங்கள்… வரலாற்றின் பக்கங்களை சற்றே பின்னோக்கி பார்ப்போம்.
**அண்ணா மறைவும் கருணாநிதியின் தலைமையும்**
தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி காலமானார். அண்ணா மறைவைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வரானார். திமுகவின் அடுத்த தலைமை யார் என்பதில் தொடங்கியது முதல் பிரச்சனை.
திமுகவைப் பொறுத்தவரையில் 2-வது இடத்தில் இருந்த நெடுஞ்செழியன் ஆட்சியும் கட்சியும் தமக்குத்தான் கிடைக்கும் என இலவு காத்து இருந்தார். ஆனால் கருணாநிதியோ அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார். அப்போது கருணாநிதிக்கு நண்பர் எம்ஜிஆரின் முழு ஆதரவு இருந்தது.
இதனால் திமுக தலைவராக, தமிழகத்தின் அடுத்த முதல்வராக கருணாநிதி அரியாசனம் ஏறினார். வழக்கம் போல திமுகவில் 2 ஆவது இடம்தான் நெடுஞ்செழியனுக்கு கிடைத்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் பொருளாளராக எம்ஜிஆரும் நியமிக்கப்பட்டனர்.
**பரபரப்பை ஏற்படுத்திய 1971 சட்டசபை தேர்தல்**
1971 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் தமிழக சட்டசபை கலைக்கப்பட்டது. லோக்சபா பொதுத்தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கருணாநிதி தலைமையில் திமுக சந்தித்த முதல் தேர்தல் இது.
காங்கிரஸ் கட்சியோ இரண்டாக பிளவுபட்டிருந்தது. காமராஜர் ஸ்தாபன காங்கிரஸை உருவாக்கினார். திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்தன. காமராஜரும் ராஜாஜியும் கைகோர்த்தனர்.
இத்தேர்தல் பிரசாரம் தொடங்கும்போதே கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்குமான சலசலப்புகள் வெளிப்படத் தொடங்கின. தேர்தல் பிரசாரத்துக்காக எம்ஜிஆர் பெருமளவு பணத்துடன் சுற்றுப் பயணத்துக்குத் தயாராக இருந்தார். ஆனாலும் கருணாநிதியிடம் இருந்து முறைப்படியான அழைப்பு வரவில்லை என்கிற ஆதங்கம் எம்ஜிஆருக்கு இருந்தது. அதனால் தாம் படங்களில் பிசியாக இருப்பதாக கூறி தவிர்த்து வந்தார்.
எம்ஜிஆர் இல்லாமல் போனால் தேர்தலில் வெல்ல முடியாது என கருணாநிதியிடம் ஆர்.எம்.வீரப்பன் விளக்கி வலியுறுத்தி சமாதானப்படுத்தினார். கருணாநிதியோ எம்ஜிஆர் தானாகவே பிரசாரம் செய்யலாமே? எதற்காக அழைப்பு விடுக்க வேண்டும்? என எதிர் கேள்வி கேட்டார். ஒருவழியாக இருந்த புகைச்சல் ஓய்ந்து எம்ஜிஆரின் பிரசார பயணம் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. கருணாநிதி 2-வது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.
**சுகாதாரத்துறை அமைச்சர் பதவியும் மதுவிலக்கு ஒழிப்பும்**
கருணாநிதி முதல்வரான அதே கால கட்டத்தில் ஒரு கண்ணாமூச்சி ஆட்டமும் நடந்தேறியது. அதுதான் எம்ஜிஆருக்கு அமைச்சர் பதவி. கருணாநிதியைப் பொறுத்தவரையில் எம்ஜிஆருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி தர விரும்புவதாக ஒரு தகவல் பரவ விடப்பட்டது. அதே நேரத்தில் திரைப்படங்களில் பிசியாக இருக்கும் எம்ஜிஆருக்கு எப்படி அமைச்சர் பதவி தர முடியும்? என்கிற விவாதத்தையும் கருணாநிதியே தொடங்கி வைத்தார். கருணாநிதியின் இந்த ஆடுபுலி ஆட்டத்தை எம்ஜிஆர் உணராதவரும் அல்ல. எம்ஜிஆரை அமைச்சரவையில் சேர்க்காமல் இருக்க ஏராளமான காரணங்கள் அள்ளிவிடப்பட்டன.
இத்தனையையும் புரிந்து கொண்ட எம்ஜிஆர் அடுத்த களத்துக்கு தம்மை தயார்படுத்திக் கொண்டார். அப்போது கருணாநிதி கையில் எடுத்திருந்தது மதுவிலக்கு ஒழிப்பு. தமிழகத்தில் சுமார் கால் நூற்றாண்டு காலமாக அமலில் இருந்த மதுவிலக்கை ஒழித்து கள்ளுக்கடைகளையும் சாராயக் கடைகளையும் திறக்கலாம் என்பது முதல்வராக இருந்த கருணாநிதியின் முடிவு.
ஆனால் காமராஜரும் ராஜாஜியும் வரிந்து கட்டிக் கொண்டு இதனை எதிர்த்தனர். இங்கே டெல்லியின் அரசியல் சித்து விளையாட்டுகளும் உள்ளே நுழைந்தன. கருணாநிதியின் மதுவிலக்கு ஒழிப்புக்கு எதிராக எம்ஜிஆர் பேசத் தொடங்கினார். கருணாநிதியோ டெல்லியின் வஞ்சகத்தால் நிதி கிடைக்கவில்லை; வருவாய்க்காகவே இந்த முடிவு என சமாதானம் கூறிப் பார்த்தார். எம்ஜிஆர் அப்படி ஒன்றும் இதை எளிதாக விட்டுவிடுவதாகவும் இல்லை.
**தமிழகத்தின் முதலாவது ‘சமாதி’ தர்ம யுத்தம்**
1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதுவிலக்கு ஒழிப்பை நடைமுறைப்படுத்தியது கருணாநிதி தலைமையிலான அரசு. இதை மிகவும் துயரமான நாள் எனக் கடுமையாக விமர்சித்தார் எம்ஜிஆர். அத்துடன் அவர் நிற்கவில்லை. தமிழக அரசியலில் இன்று நள்ளிரவு பரபரப்புகளை கிளப்புகிற ‘சமாதி’ தர்மயுத்தங்களுக்கு பிள்ளையார் சுழியும் போட்டார் எம்ஜிஆர்.
1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமது சத்யா ஸ்டுடியோ பணியாளர்களை அழைத்துக் கொண்டு அண்ணா நினைவிடத்துக்கு சென்றார் எம்ஜிஆர். அங்கு மதுவை ஒருபோதும் அருந்தமாட்டோம் என்கிற உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆம் தமிழகத்தின் முதலாவது தர்ம யுத்தம் இது.
மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியமும் குமாரமங்கலமும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம். கல்யாணசுந்தரமும் டெல்லிக்கும் எம்ஜிஆருக்குமான தூதராக இருந்தார். திமுகவில் கருணாநிதி- எம்ஜிஆர் இடையேயான விரிசல் விரிவடைந்து கொண்டே போனது.
**புயலைக் கிளப்பிய 1972**
திமுக அரசின் மதுவிலக்கு ஒழிப்புக்கு எதிரான எம்ஜிஆரின் பிரசாரம் தீவிரமடைந்தது. இந்த பிரசாரம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளவும் நேரிட்டது. அந்த கால கட்டத்தில் ஊடகங்களில் வெளியான ஒரு தகவல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. திமுக அரசைக் கலைக்க மூவர் அணி சதி செய்கிறது என்பதுதான்? இதையடுத்து யார் அந்த மூன்று கறுப்பு ஆடுகள் என்கிற விவாதம் அரசியல் அரங்கத்தில் களைகட்டியது.
இந்த கறுப்பு ஆடுகளில் ஒருவராக எம்ஜிஆரும் கருதப்பட்டார் என்பது வரலாறு. என்னதான் அதிருப்தி இருந்தாலும் அதை வெளிப்படையாக எம்ஜிஆர் காட்டிக் கொள்ளாமல்தான் இருந்தார். 1972 ஆகஸ்ட் 5-ல் மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பேசிய எம்ஜிஆர், ஆட்சிக் கலைப்புக்கு உடந்தை என்கிற விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். இதே கால கட்டத்தில் எம்ஜிஆர் வருமான வரி விவகாரத்திலும் சிக்கியிருந்தார்.
எம்ஜிஆரின் இதய வீணை படம் வெளியாகி அதில் இடம்பெற்றிருந்த ‘ஒரு வாலும் இல்லே, நாலு காலும் இல்லே; சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே….’ என்கிற பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியும் இருந்தது. இந்த வரிகள் தம்மைத்தான் விமர்சிக்கின்றன என பெருங்கோபத்தில் இருந்தார் கருணாநிதி. இதனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் விறுவிறு மாற்றங்கள் களைகட்டின.
**எம்ஜிஆரின் திருக்கழுக்குன்றம் ’கணக்கு பேச்சு**
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ல் திருக்கழுக்குன்றத்திலும் பின்னர் காஞ்சிபுரத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் திமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார் எம்ஜிஆர். திருக்கழுக்குன்றம் கூட்டத்தில்தான் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் தங்களது சொத்துக் கணக்குகளைக் காட்ட வேண்டும் என முழங்கினார் எம்ஜிஆர். இந்த பேச்சை மதுரையில் இருந்த கருணாநிதி போலீசாரின் ஒயர்லெஸ் கருவி மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.
திருக்கழுக்குன்றத்தில் எம்.ஜிஆர் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது: ‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!
உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும்.
நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன். நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா? திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?
ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு! இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன். மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்பு நிரூபிக்கலாம்.
இதுதான் அதிமுக உதயமாவதற்கு அடித்தளம் போட்ட எம்ஜிஆரின் முதல் பேச்சு.
**எம்ஜிஆரை நீக்கும் பணிகள் மும்முரம்
எம்ஜிஆரின் திருக்கழுக்குன்றம் பேச்சால் கொந்தளித்துப் போனார் கருணாநிதி. அக்டோபர் 10 ஆம் தேதி திமுகவின் செயற்குழுக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். எம்ஜிஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்செழியன் உள்ளிட்ட 26 பேர் கையெழுத்திட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து எம்ஜிஆரை திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கும் அறிக்கை வெளியானது. அப்போது எம்ஜிஆர், நேற்று இன்று நாளை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். எம்ஜிஆருக்கு தகவல் கிடைக்கிறது….தம்மை திமுக நீக்க முடிவு செய்துவிட்டது என்பது மகிழ்ச்சி என கூறி பாயாசம் சாப்பிட்டு கொண்டாடினார் எம்ஜிஆர்.
அதேநேரத்தில் எம்ஜிஆர் தமது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தால் அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் எனவும் கருணாநிதி கூறியிருந்தார். தந்தை பெரியாரும் கருணாநிதி- எம்ஜிஆர் பிளவை சரி செய்ய முயற்சித்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடியது. அப்பொதுக்குழுவில் 310 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் 277 பேர் எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து திமுகவில் இருந்து எம்ஜிஆர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். இதே காலத்தில் எம்ஜிஆர் மீதான நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களும் தமிழகத்தில் நடைபெற்றன. எம்ஜிஆரை ஏன் நீக்கினோம் என்கிற விளக்கப் பொதுக்கூட்டங்களையும் திமுக நடத்தியது.
1972 அக்டோபர் 16 ஆம் தேதி உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்ற தொண்டர் எம்ஜிஆர் வாழ்க என முழங்கியபடி தீக்குளித்தார். இத்தீக்குளிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. இதன் தொடர்ச்சியாக 1972 அக்டோபர் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனிக் கட்சியை எம்ஜிஆர் தொடங்குவதாக அறிவித்தார்.
திமுக எனும் பேரியக்கத்தில் இருந்து மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் பெருந்திரளாக எம்ஜிஆரின் அதிமுக பக்கம் கை கோர்த்தனர். இதனையடுத்து தமிழகம் திமுக, அதிமுக எனும் இரு துருவ அரசியலாக பயணத்தை தொடங்கி இன்று வரை அது நீடித்துக் கொண்டே இருக்கிறது.
�,”