எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்றம் சட்டப்பேரவை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக முயன்றதால் அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் என இரு அணிகளாக உடைந்தது. பின்னர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அதன்பிறகு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றதால், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கூவத்தூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டனர். பின்னர் எடப்பாடி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்தச் சூழ்நிலையில் கடந்த 12ஆம் தேதி டைம்ஸ் நவ் – மூன் தொலைக்காட்சி இணைந்து நடத்திய விங்க் ஆபரேஷனில் பன்னீர் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. அதில், கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு ஆறு கோடி ரூபாய் வரை பணம் தருவதற்கு சசிகலா அணியினர் உறுதியளித்ததாக அவர் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் மேலும் ஆதாரம் இல்லாமல் எதையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். ஸ்டாலின் ஆதாரத்தை சி.டி. வாயிலாகக் கொடுத்தும் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், சிபிஐ விசாரணை கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஜூன் 19ஆம் தேதி நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வீடியோ விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு சட்டப்பேரவை செயலாளர் பூபதிக்கு நோட்டீஸ் அனுப்பவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.�,