எம்பிபிஎஸ் கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமற்றது!

Published On:

| By Balaji

தமிழகத்தில் நடந்த மருத்துவக் கல்வி கலந்தாய்வில் பிற மாநிலத்தவர்கள் கலந்து கொண்டதால் அதனை ரத்து செய்யக் கோரிய வழக்கை மதுரை உயர் நீதி மன்றம் இன்று(செப்டம்பர் 24) ரத்து செய்துள்ளது.

இந்த மனுவின் சாரம் பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் நடக்கும் மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொள்வதால் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதே. ஜுலை 6ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், 15ஆம் தேதி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. அதில் தமிழக மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டதாக மதுரையை சேர்ந்த நேயா, ஸ்ரீலயா, சோம்நாத் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 744 இடங்களில் இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். எனவே, 2019- 2020 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வை ரத்து செய்வதோடு, பட்டியலில் இருந்து வெளிமாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கில் வெளி மாநிலத்தவர் என கூறப்படும் 126 பேரையும் எதிர்மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்களில் சான்றுகள், ஆவணங்கள் சரியாக இருந்த 68 பேர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் “கலந்தாய்வினை முழுமையாக ரத்து செய்து புதிதாக நடத்துவது சாத்தியமானதல்ல என்றும் தேவையெனில் சான்றிதழ்களை சரிபார்த்துக்கொள்ளலாம்” என்றும் கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share