எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 23) அடிக்கல் நாட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு கடந்த ஆண்டு கொண்டாடியது. எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்துக்கும், மாநில கல்லூரிக்கும் இடையே அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது
அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தின் அருகில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஆகஸ்ட் 23) அடிக்கல் நாட்டினார். சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
ரூ. 2.52 கோடி செலவில், பளிங்குக் கற்களால் இந்த வளைவு அமைக்கப்படவுள்ளது. அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்டதாக வளைவு அமைக்கப்படவுள்ளது. வளைவு அமைக்கும் பணியை 3 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.�,