என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!

Published On:

| By Balaji

மாசெ கூட்டத்தில் உருகிய துரைமுருகன்

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் பற்றிய ஆலோசனைக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (ஜூலை 15) மாலை 7 மணிக்கு மேல் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்றது.

முதலில் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரையாற்றினார். பின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள். வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை காந்தி, மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் பேசுகையில், “வேலூர் தொகுதி முழுவதும் பூத் கமிட்டி உள்ளிட்ட பணிகளை முடித்துவைத்து விட்டோம். வெளியூரிலிருந்து வருகிற கட்சிக்காரர்களுக்கு ஓட்டுக் கேட்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. எனவே கழகத்தினர் வேலூர் வந்து நமது வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது, “வேலூர் தொகுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு நாட்களாகப் போய்ப் பார்த்துவிட்டுதான் வந்தேன். தொகுதி நமக்குத்தான் சாதகமாக இருக்கிறது. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஈடுபாட்டோடு வேலை செய்தால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான்” என்றார்.

பொருளாளர் துரைமுருகன் பேசுகையில் எப்போதுமே கிண்டல் கேலி இருக்கும். ஆனால், இந்தக் கூட்டத்தில் ரொம்பவே உருக்கமாகிவிட்டார். காரணம், வேட்பாளராக நிற்பது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.

“வேலூர் தேர்தல் என்பது துரோகத்தால் நிறுத்தப்பட்ட தேர்தல். தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நிறுத்தப்பட்ட அறிவிப்பு வந்தபோது நான் துடித்துவிட்டேன். அப்போது தளபதிதான் எனக்கு ஆறுதல் சொன்னார். நம்பிக்கை கொடுத்தார். வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் நிற்கிறான் என்று பார்க்காதீர்கள். ஒரு ‘திமுக’காரன் நிற்கிறான், கட்சியின் ஊழியன் நிற்கிறான் என்று பாருங்கள். அப்படிப் பார்த்து வேலை செய்து வெற்றிபெற வையுங்கள்” என்று பேசினார்.

கடைசியாக ஸ்டாலின் பேசுகையில், “நாம் ஏதோ குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துக் கடத்திப் போவதைப் போல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்து வெற்றிபெற்று விட்டோம் என்று முதல்வரே பேசுகிறார். அதை முறியடிக்கணும்னா, அவர் சொல்றது பொய் என நிரூபிக்கணும்னா நாம் வேலூர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் நாம் ஏற்கனவே பெற்ற வெற்றியும் விமர்சனத்துக்கு ஆளாகிவிடும். அதனால் எல்லாரும் கவனமா தேர்தல் வேலைகளைப் பாருங்கள். இது நம் கௌரவப் பிரச்சினை” என்றவர் தொடர்ந்து,

“வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடக்கிறது. தேர்தல் முடிந்த இரண்டாவது நாளில் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. அன்றைய தினம் முரசொலியில் கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சி, கூட்டம் நடத்த இருக்கிறோம். மம்தா பானர்ஜி வருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே, தேர்தல் முடிந்தது என்று இருந்துவிடாமல் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் நீங்கள் இறங்கிவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share