தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று (ஜூலை 20) அதிகாலை முதல் மதுரை, ராமநாதபுரம், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.
அன்சார் அல்லா அல்லது அன்சாருல்லா என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது.
என்.ஐ.ஏ. கடந்த ஜூலை 13 ஆம் தேதி நாகை மாவட்டத்தில் மஞ்சக்கொல்லை ஹாரிஷ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப், 5 ஹார்ட் டிஸ்க், 6 பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஹாரிஸ் முஹம்மது, அசன் அலி ஆகியோரிடம் நாகை எஸ்.பி அலுவலகத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து அன்சாருல்லா என்ற அமைப்புக்கு நிதி திரட்டிய குற்றத்துக்காக சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 14 பேருடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதிய என்.ஐ.ஏ. அதிகாரிகள், அந்த 14 பேரையும் டெல்லிக்கு விமானத்தில் வரவழைத்து கடந்த ஜூலை 15 ஆம் தேதி சென்னை கொண்டுவந்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நேற்று (ஜூலை 19) இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மொத்தம் 16 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் கஸ்டடியில் எடுத்து எட்டு நாட்கள் விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் ஊர்களான சென்னை, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.
14 பேரில் 5 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அதில் நால்வர் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வாலி நோக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் ஐந்து பேர் வீட்டிலும், பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிகாடு குலாம் நபி ஆசாத் மற்றும் அந்த 16 பேரில் சென்னை, மதுரை, நாகை, தேனியைச் சேர்ந்தவர்கள் வீடுகளிலும் இன்று காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தந்த நகரங்களில் ஏற்கனவே சென்று தங்கிவிட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலையே தமிழக போலீஸாருடன் சோதனைக்குப் புறப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவர் வீட்டுக்கும் மூன்று என்.ஐ.ஏ. அதிகாரிகளும், ஐந்து உள்ளூர் போலீஸார் என மொத்தம் எட்டு பேர் சென்று சோதனையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதனைக்குத் தேவையான முழு பாதுகாப்பையும் தமிழக போலீசார் வழங்குகிறார்கள்.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதற்காக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வசூல் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவருவதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய அரசுக்கு எதிராக இவர்கள் பணம் பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது” என்று என்.ஐ.ஏ. வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இன்னும் ஒரு வாரம் கஸ்டடி காலம் இருப்பதால் அதற்குள் 16 பேரிடமும் தீவிர விசாரணை நடத்திடத் திட்டமிட்டிருக்கிறது என்.ஐ.ஏ.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”