தேர்தல் விதிமுறைகளை மீறியதுடன், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் பக்சர் தொகுதியிலிருந்து 2014ஆம் ஆண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஸ்வினி குமார் சவுபே. பாஜகவைச் சேர்ந்த இவர் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இம்முறையும் இவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் அஸ்வினி குமார் சவுபே ஈடுபட்டுள்ளார். மார்ச் 30ஆம் தேதி இரவு பக்சர் தொகுதியில் வாகனங்களில் சென்று அஸ்வினி குமார் வாக்கு சேகரித்தபோது, அளவுக்கு அதிகமான வாகனங்களைக் கொண்டு வந்து நிறுத்தி அஸ்வினி குமார் சவுபே பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தேர்தல் அதிகாரிகள் அவரைத் தடுத்துள்ளனர்.
இதுபோன்று தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராகச் செயல்படக்கூடாது, கலைந்துசெல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அஸ்வினி குமார் சவுபே இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட துணை மாஜிஸ்திரேட் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சியும் வெளியானது. ”என்ன பிரச்சனை? யாருடைய உத்தரவு இது? நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் என்னை சிறைக்கு அனுப்புங்கள். இது என்னுடைய வாகனம், இதை நீங்கள் பறிமுதல் செய்ய இயலாது” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட துணை மாஜிஸ்திரேட் கே.கே.உபாத்யாய் கூறுகையில், ”தேர்தல் பிரச்சாரத்துக்கு 30, 40 வாகனங்களை எடுத்துவந்து ஜிலா மைதீன் பகுதியில் நிறுத்தியுள்ளனர். இதற்கு அனுமதியில்லை. இதை அஸ்வினி குமார் சவுபேவிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் பேசிய வார்த்தைகள் கவலைக்குரியதாய் இருந்தது. இதனால் அங்கிருந்த எல்லா வாகனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். மேலும் அஸ்வினி குமார் உள்ளிட்ட அவருடன் சென்ற சுமார் 100 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.�,