எந்த மெகா கூட்டணியாலும் வீழ்த்த முடியாது : பன்னீர்

public

“அதிமுக என்பது மக்களுக்கான இயக்கம். எவ்வளவு மெகா கூட்டணி அமைத்தாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(செப்டம்பர் 30) நடைபெற்றது. முன்னதாக, நந்தனத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து, நிகழ்ச்சியில் எம்ஜிஆருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “அலைகடல் கடந்தும் அனைவரின் உள்ளத்திலும் இருக்கும் ராஜராஜ சோழன்தான் எம்ஜிஆர். அருகம் புல்கள் ஆலமரமாக ஆசைப்படக்கூடாது. திமுகவின் தலைவர் பதவி கிடைத்ததை வைத்து மட்டுமே ஸ்டாலின் சந்தோசப்பட வேண்டும். நாங்கள் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசளித்து பழக்கப்பட்டவர்கள்.

திகாரில் இருக்க வேண்டிய சில கரன்கள் தினகரன்களாக ஊருக்குள் சுற்றிக்கொண்டு வருகின்றனர். வாய்தா வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும் சில அற்பர்கள் அதிமுகவை விமர்சிக்க தங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மாஃபியா கலாச்சாரத்தைக் கொண்டு வந்ததே மன்னார்குடி குடும்பம்தான்.

சினிமாவில் முதல் இன்னிங்ஸ் முடிந்துவிட்டதால் அங்கு இனியும் வெற்றி பெற முடியாது என்பதால் சிலர் அரசியலுக்கு வருகின்றனர். தனது சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்கியவர் எம்ஜிஆர். இருக்கின்ற கட்டிடத்துக்கு வாடகை கட்டுவதை தவிர்க்க நீதிமன்றம் செல்பவர்கள் எம்ஜிஆரை பற்றி எப்படிப் பேசலாம்.

தனக்கும் புரியாமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசும் இன்னொருவர் உள்ளார். மக்களுடன் ஒருநாள் தெருவில் நடந்துள்ளீர்களா? திரைப்படத்தில் உங்கள் நடிப்பு எடுபடலாம். ஆனால் அரசியலில் எடுபடாது” என ஸ்டாலின் முதல் கமல் வரை அனைவரையும் விமர்சித்தார்.

சீன- இந்தியா யுத்தத்தின்போது அதிக அளவு நிதி அளித்தது நடிகர் எம்ஜிஆர்தான் என்று பேச்சை தொடங்கிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “எம்ஜிஆருக்கு பாடல் எழுதும்போது ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்ற வரிக்கு அடுத்த வரியை வாலி யோசித்துக்கொண்டு இருந்தபோது ‘நான் அளவில்லாமல் கொடுப்பவன்’ என்ற வரியை எடுத்துக்கொடுத்தவர் கலைஞர். கலைஞரே எம்ஜிஆரின் கொடையைப் புகழ்ந்துள்ளார்.

மு.க. முத்துவை எம்ஜிஆருக்கு எதிராக சினிமாவில் கலைஞர் அறிமுகப்படுத்தினார். ஒருவேளை மு.க.முத்து அரசியலில் இருந்திருந்தால் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கிடைத்திருக்காது” என்று குறிப்பிட்டார்.

சபாநாயகர் தனபால் பேசும்போது, திரைத்துறை மற்றும் அரசியலில் வெற்றிபெற்றதோடு, முதலிடத்தையும் பிடித்து அதை இறுதிவரை தக்கவைத்துக்கொண்டவர் எம்ஜிஆர். அதனால்தான் எம்ஜிஆரை இதயக்கனி என அண்ணா புகழ்ந்தார்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் தமிழகத்தில் மேல் சபை கலைக்கப்பட்டது. மேல் சபை தலைவராக இருந்த மா.பொ.சி.க்கு இதில் உடன்பாடு இல்லை. எனினும் சட்டம் இயற்றி மேல்சபையை கலைத்தார். இதையறிந்த எம்ஜிஆர், மா.பொ.சி. வீட்டுக்கே சென்று மேல்சபை ஏன் கலைக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை அளித்து அவரது கையில் கார் சாவி ஒன்றையும் வழங்கினார். மேல்சபை இருந்தபோது வழங்கப்பட்ட அத்தனை சலுகைகளையும் வழங்குவதாக தெரிவித்தார். அப்படிப்பட்ட தலைவர்தான் எம்ஜிஆர் என்று புகழாரம் சூட்டினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், “சென்னை மாநகரமே இன்று குலுங்கியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேலானவர்கள் சென்னையில் கூடியுள்ளனர்.

1969ல் நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. பெயர் சூட்டப்பட்டு தற்போது 50 ஆண்டுகள் ஆகியுள்ளது.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தற்போதைய ஆட்சி செயல்படுகிறது. தனக்கு துன்பம் இழைத்தவர்களையும் மன்னித்து அள்ளிக்கொடுத்தவர் எம்ஜிஆர்.

நூற்றாண்டு விழா அழைப்பிதழில் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவிக்கு மரியாதை அளித்து மு.க.ஸ்டாலின் பெயரை இடம்பெற செய்தோம். அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால், ஏதேதோ காரணம் சொல்லி ஸ்டாலின் தவிர்த்துவிட்டார்.

எம்ஜிஆர் செய்ததை பற்றிக் குறிப்பிடும்போது, மற்றவர்கள் செய்யாமல் இருந்ததையும் சேர்த்துதானே கூறமுடியும்.

இலங்கை போருக்கு இந்தியா உதவி செய்தது என்று ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கூறினார். அதைதான் தற்போது ராஜபக்சே உறுதிப்படுத்தியுள்ளார். அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி தானே.

அதிமுக என்பது மக்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. எவ்வளவு மெகா கூட்டணி அமைத்தாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது. தமிழகத்தை அதிமுகதான் எப்போதும் ஆளும்” என்று தெரிவித்தார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *