எதையும் எளிதாகப் படிக்க! – காம்கேர் கே.புவனேஸ்வரி

Published On:

| By Balaji

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? – 40

எவ்வளவு கஷ்டமான பாடத்தையும் சுலபமாகப் படிக்க ஒரு வழிமுறை உள்ளது. அதற்கு PQRST என்று பெயர்.

இந்த முறைப்படி படிக்கும்போது மனித மூளை எல்லா பாடங்களையும் எளிதாகப் புரிந்துகொள்ளும். நிறைய நாட்கள் சேகரித்துவைத்துக் கொள்ளும். நினைவாற்றலும் வலுபெறும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

1. P – Preview

2. Q – Question

3. R – Read

4. S – Self Recite

5. T – Test

பாடங்களை ஒருமுறை பரவலாகப் படித்து, அதை பகுதி பகுதியாகப் பிரித்து கேள்விகளாக்கி, கேள்விகளுக்கான பதில்களைத் தயாரித்துப் படித்து, நினைவுப்படுத்திப் பார்த்து, தேர்வெழுத பயிற்சி செய்துப் பழகினால் படிக்கும் பாடங்கள் நினைவில் நீண்ட நாட்கள் நிற்கும் என்பதற்கு உதவும் நுட்பத்துக்கு PQRST என்று பெயர்.

1. P -Preview

‘ப்ரிவியூ’ என்பதை ஒரு சுற்றுலா செல்ல ப்ளான் போடுவதோடு ஒப்பிடலாம்.

• அந்த இடத்துக்குச் செல்வதற்கு ஒரு பிளான் போடுவோம்.

• அங்கு செல்லும் வழிகளில் பார்ப்பதற்கு என்னவெல்லாம் உள்ளன என மேப்பில் தேடி எடுப்போம்.

• எந்த இடத்தில் எந்த நாளில் பயணத்தைத் தொடங்கி எந்த இடத்தில் முடித்து எந்த தேதியில் திரும்புவோம் என்பதை நிர்ணயிப்போம்.

இதுபோலதான் ஒரு புத்தகத்தில் உள்ள ஒவ்வோர் அத்தியாயத்தையும் படிக்கும் முன் ‘ப்ரிவியூ’ செய்ய வேண்டும். பாடங்கள் புரிகிறதோ, இல்லையோ முழுமையாகப் படித்துவிட வேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையிலோ அல்லது கேள்வித்தாளின் வடிவமைப்பின் அடிப்படையிலோ படிக்காமல் பாடங்களைப் புத்தகத்தில் உள்ளது உள்ளபடி படிக்க வேண்டும்.

• ஒவ்வோர் அத்தியாயத்திலும் உள்ள முதன்மை தலைப்பு, துணைத் தலைப்பு, படங்கள், சார்ட்டுகள், சமன்பாடுகள் போன்றவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.

• ஒவ்வோர் அத்தியாயத்தைப் படித்தவுடன் அதன் சுருக்கத்தையும் தனியாகக் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிப்பை வைத்தே அந்த அத்தியாயத்தின் ஒட்டுமொத்த கான்செப்ட்டையும் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தெளிவாக இருக்க வேண்டும்.

இப்படிப் படிக்கும்போது நம் மனதில் அதற்கான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உருவாகிவிடும். அந்தப் பாடத்தில் உள்ள எல்லா விஷயங்களும் புரியாவிட்டாலும் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்ற விவரம் புரியத் தொடங்கும்.

2. Q – Question

ஒவ்வோர் அத்தியாயத்தையும் ப்ரிவியூ செய்தவுடன் அந்த அத்தியாயத்தின் ஒவ்வொரு தலைப்பையும் கேள்விகளாக்கி உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

முதன்மை தலைப்பு, துணைத் தலைப்பு என ஒவ்வொரு தலைப்புக்கும் What, Where, When, Why, Who, How என வெவ்வேறு விதமான வெவ்வேறு கோணங்களில் கேள்விகளைத் தயாரியுங்கள்.

அப்போது ஒவ்வொரு தலைப்புக்குமான கான்செப்ட் நினைவில் நன்றாகப் பதியும்.

குழந்தைகளைக் கவனியுங்கள். கேள்விகள் கேட்டபடி இருப்பார்கள். அவற்றுக்கு நாம் என்ன பதில் சொல்கிறோமோ அந்த பதில்களை அவர்கள் காலத்துக்கும் மறக்காமல் வைத்திருப்பார்கள்.

ஆனால், நாம் அறிவுரையோ ஆதங்கப் புலம்பல்களாகவோ சொன்னால் அவர்கள் மனதில் ஏறுவதில்லை.

அதே நுணுக்கம் எல்லோருக்குமே பொருந்தும். எனவே, எந்த ஒரு கான்செப்டானாலும் அதைக் கேள்விகளாக்கி அவற்றுக்கான பதில்களை தயாரித்தால் நினைவை விட்டு நீங்காமல் ஆழமாகப் பதியும்.

3. R – Read

ஒவ்வோர் அத்தியாயத்திலும் அதன் தலைப்புகள், துணை தலைப்புகள் போன்றவற்றுக்கு நீங்கள் தயாரித்துவைத்துள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாகப் பதில்களைப் படியுங்கள், தயாரியுங்கள்.

பதில்களை நினைவில்வைத்துக் கொள்ள அந்தப் பதில்களுக்கு ஓர் அடையாள வார்த்தையை நினைவில்வைத்துக் கொள்ளலாம். பொதுவாகவே அந்த அடையாள வார்த்தை அந்தத் தலைப்புகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முதல் பாராவிலேயே கிடைத்துவிடும்.

பதில்களை ஏதேனும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு லிங்க் கொடுத்துக்கொள்ளலாம். கற்பனையில் நீங்களாகவேகூட ஏதேனும் உதாரணங்களை உருவாக்கவும் செய்யலாம்.

கான்செப்ட்டுகளைவிட உதாரணங்கள்தான் அவற்றை நினைவில்வைத்துக் கொள்ளப் பேருதவி செய்யும்.

கான்செப்ட் பெரியதாக இருந்தால் அதைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.

4. S – Self Recite

ஒவ்வோர் அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு கான்செப்ட்டையும் கேள்விகளாகக் கேட்டு பதில்களைத் தயாரித்துப் பலமுறை படித்து மனதுக்குள் பதியவைத்துக் கொண்ட பின்னர் உடனடியாக அடுத்த கான்செப்ட்டுக்குச் சென்றுவிடக் கூடாது.

படித்த கான்செப்ட் குறித்து மனதுக்குள் தொகுப்பாக்கிக் கொண்டு மனதுக்குள்ளேயே சொல்லிப் பார்க்கலாம்.

பேப்பரில் எழுதிப் பார்க்கலாம். கம்ப்யூட்டரில் டைப் செய்தும் பழகலாம்.

மெளனமாகப் படிப்பதைக் காட்டிலும் எழுதிப் பார்ப்பதும், உரக்கச் சொல்லிப் பார்ப்பதும் படித்ததை இன்னும் ஆழமாக நினைவில் பதிய வைக்க உதவும்.

(Question – Read – Summarize என்ற மூன்று வழிமுறைகளை ஒவ்வோர் அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் செய்ய வேண்டும். ஓர் அத்தியாயம் முடிந்த பின்னர் Test என்ற அடுத்த வழிமுறைக்குச் செல்ல வேண்டும்)

5. T – Test

ஒவ்வோர் அத்தியாயத்திலும் உள்ள தலைப்புகள் துணை தலைப்புகள் அனைத்தையும் சிறு சிறு பகுதிகளாக்கி, கேள்விகளாக்கி, பதில்களைத் தயாரித்துப் படித்த பின்னர் நீங்கள் தயாரித்துள்ள கேள்விகளின் அடிப்படையில் உங்களுக்குத் தேர்வுவைத்துக் கொள்ளலாம்.

தேர்வு என்றாலே அலர்ஜியாக இருக்கும் பல மாணவர்களுக்கு இந்த முறை பேருதவியாக இருக்கும். அவர்களாகவே அவர்களுக்குத் தேர்வு வைத்துக்கொண்டால் தேர்வு பயம் மெல்ல மெல்ல விலகும்.

பள்ளி / கல்லூரியில் தேர்வெழுதும்போது கொஞ்சமும் பயம் இருக்காது. காரணம், மனது தேர்வு என்ற வார்த்தைக்கும், அந்தச் சூழலுக்கும் பழகியிருக்கும்.

Courtesy: This is a method of reading a textbook so that the information you read really does enter your long term memory. It is based on work by Thomas and H. A. Robinson, Spache and Berg and R. P .Robinson. This information is provided courtesy of Dr Yow Kin Choong from his copy of the book Psychology” by Atkinson et. al.

கற்போம்… கற்பிப்போம்!

[சேவை மனப்பான்மையும் தொழில் வாய்ப்பும்!](https://minnambalam.com/k/2019/03/29/15)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share