நமக்குள் தேடுவோம் 5 – ஆசிஃபா
சிலருக்குச் சட்டென்று கோபம் வந்துவிடுவது உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபம் வரும். காரணம் தெரியாத கோபம். அதை நினைத்துப் பல நேரம் நமக்கே சங்கடமாக இருக்கும். ஏன் கோபம் வருகிறது என்பதைச் சற்றுப் புரிந்துகொண்டால், கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழி வசப்படும்.
நமக்குப் பிடிக்காத அல்லது நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால், உடனடியாக நமக்குக் கோபம் வரும். இதுதான் அடிப்படை. ஆனால், கோபம் என்பது இரண்டாம் நிலை உணர்வு. ஏதோ வலி அல்லது அசௌகரியமே கோபமாக மாறுகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், அந்த வலியை மறக்கவோ, மறுக்கவோ கோபத்தை வெளிப்படுத்துகிறோம். நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இது நடக்கிறது.
**கோபம் என்னும் தொற்று நோய்**
கோபம் என்பது தனிநபர் தொடர்புடையது அல்ல. காரணம், நாம் மட்டுமே இருக்கும்போது கோபம் வராது. இரண்டாம் நபரோ, சூழலோ இருந்தால் மட்டுமே கோபம் வரும். அப்படி இரண்டாம் நபர் இருந்தால்தான் அதை வெளிப்படுத்தவும் முடியும். சில நேரங்களில் நம் மீதே நாம் அதை வெளிப்படுத்திக்கொள்வோம். ஆனால், காரணம் இன்னொன்றாகத்தான் இருக்கும். ஏதோ ஒரு trigger. அப்படி இருக்கையில், ‘கோபத்தைக் கட்டுப்படுத்து’ என்று எப்போதுமே சொல்வது அபத்தம். அடக்கப்பட்ட உணர்ச்சி எதிர்மறையாகவே வெளிப்படும்.
அதிலும், கோபம் பயங்கரமாகப் பரவக்கூடியது. யோசித்துப் பாருங்களேன். காலையிலேயே வீட்டில் சண்டை. வெளியில் செல்கிறோம். ஆட்டோவிலோ, பேருந்திலோ எரிச்சலைக் காண்பிப்போம். அவர் அதை அடுத்த ஆளிடம் காண்பிப்பார். இப்படிப் பரவிக்கொண்டேபோகும். அது மட்டுமல்லாமல், சிறு வயதில் நம் மீது காரணம் இல்லாமல் காண்பிக்கப்படும் கோபம் பல காலம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும். அதுவும், நம் பெற்றோரின் கோபம் நம்முடைய கோபத்தையும் அதைத் தொடர்ந்து நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதையும் தீர்மானிக்கிறது.
வீட்டுப் பாடத்தில் தவறு செய்வதற்காக எப்போதும் அம்மா நம்மைக் கண்டித்து / தண்டித்துக்கொண்டே இருக்கிறார். வளர்ந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். ஒன்று, நம் தவறுகளைச் சாதாரணமாகச் சுட்டிக் காட்டும்போதுகூடக் கோபம் வந்துவிடும். அல்லது, நாம் செய்வது தவறாகிவிடக்கூடும் என்னும் முன்முடிவுடன் அனைத்தையும் செய்வோம். நமக்கே இதற்கான காரணம் தெரியாது. சிறு வயதில் நம்முடன் இருப்பவர்களின் கோபம் நம்மை இப்படியும் பாதிக்கக்கூடும். அதாவது, இன்று நம்முடைய கோபம் நம் வீட்டில் வளரும் குழந்தைகளையும் பாதிக்கக்கூடும்.
கோபத்துடன் வரும் இன்னொரு முக்கியமான எக்ஸ்ட்ரா பேகேஜ், குற்றவுணர்ச்சி. இவ்வளவு கோபப்படுகிறோமே என்ற எண்ணம் நம்மை ஆட்கொள்கிறது. அது மேலும் கோபத்தை உருவாக்குகிறது. மீண்டும் குற்றவுணர்ச்சி, மீண்டும் கோபம். சுழற்சி முறையில் இது நடந்துகொண்டே இருக்கும். ஒரு நிலையில் இது அடர்த்தியாகத் தொடங்கி, அதீதமான குற்றவுணர்ச்சியும், கோபமும் ஏற்பட்டு, நம் இயல்பே நமக்கு மறந்துவிடும் நிலைக்குப் போய்விடுகிறோம்.
**கோபத்தின் ஊற்றுக்கண் தேடி…**
நாம் கோபத்தை அணுகும் முறையைப் பற்றி யோசிக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, தண்ணீர் குடிப்பது, மனத்தை திசை திருப்புவது, அந்தச் சூழலை விட்டு வெளியேறுவது எல்லாமே தற்காலிகத் தீர்வுகள்தான். நாம் ஏன் கோபப்படுகிறோம் என்பதன் காரணத்தை அறிய வேண்டும். அதாவது, அடியாழத்தில் இருக்கும் காரணம். அதைத் தெரிந்துகொண்டால், கோபம் குறையத் தொடங்கும்.
இது சற்றுக் கடினமான வேலைதான். கோபத்தின் வேரை அறியும் இந்தத் தேடலில் நாம் சில சமயம் நம்முடைய சிறு வயது வரைக்கும் பொறுமையாகச் சென்று பார்க்க வேண்டியிருக்கும். நமக்குள் நிதானமாகத் தேட வேண்டியிருக்கும். அப்படித் தேடினால் தீர்வு கிடைக்கும்.
கோபத்தின் வேருக்குச் சென்று அதைப் புரிந்துகொண்டு அதன் காரணியை அலசி, நம்மை மாற்றிக்கொண்டு அதன் மூலம் நமது கோபத்தை ஆற்றுப்படுத்துவது. இதற்கு நேரம் எடுக்கும். பொறுமை தேவை. சுய விமர்சனம் தேவை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை. பிழை நம் மீது இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனம் தேவை. அதே சமயம் குற்ற உணர்வில் சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய விவேகமும் தேவை.
இது தொலைநோக்கிலான தீர்வு. உடனடியாகச் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. நம் கோபம் மற்றவர்களைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் பிரச்சினைகளும் செயல்களும் மற்றவரை எந்த விதத்திலும் காயப்படுத்தவோ, பாதிக்கவோ கூடாது என்பதில் கவனமாக இருப்பது நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
(தொடர்ந்து தேடுவோம்…)
[யாரையாவது பாராட்டுவதுண்டா?](https://minnambalam.com/k/2019/05/21/51)�,”