திரைப்பட விமர்சனம்
முதல் பாகத்தில் எழுந்த வினாக்களுக்குப் பதில் கூறி, இந்திய ரா அமைப்பின் உளவாளி அடுத்து என்ன செய்கிறார் என்பதைக் காட்டுகிறது விஸ்வரூபம் 2.
முதல் பாகத்தில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் எனப் பயணித்த விசாம் அகமது கஷ்மீரியின் (கமல்ஹாஸன்) பின்னணி என்ன, ஆப்கானிஸ்தானில் உண்மையில் என்ன நடந்தது என்னும் முன்கதையைச் சொல்லும் இரண்டாம் பாகம், விசாம் அடுத்து என்ன செய்தார் என்னும் பின்கதையையும் சொல்கிறது.
முதல் பாகத்தில் அமெரிக்காவைக் குறிவைத்த ஓமர் (ராகுல் போஸ்), இதில் இங்கிலாந்தைக் குறிவைக்கிறார். விசாம், நிருபமா, அஸ்மிதா ஆகியோர் அதை எப்படி முறியடிக்கிறார்கள் என்பது இரண்டாம் பாகத்தின் படத்தில் முதல் பாதி. விசாமை ஓமர் பழிவாங்கும் முயற்சியும் அதை விசாம் எதிர்கொள்வதும் இரண்டாம் பாதி.
ரா அமைப்பில் இருக்கும் நபர்கள் பேசிக்கொள்ளும் விதம், செயல்படும் விதம், அவர்களுக்கே உரிய மொழி ஆகியவை நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.தொழில்ரீதியான மரண விளையாட்டையும் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் மென்னுணர்வுகள், காதல், நட்பு ஆகியவையும் காட்டப்படுகின்றன. வேலை என்று வரும்போது இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், உணர்ச்சிவசப்படாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும் காட்டப்படுகிறது.
படத்தில் சில காட்சிகளுக்கு முன் அடுத்து என்ன நிகழப்போகிறது எனச் சிறு சிறு குறியீடுகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் இரண்டாம் உலகப்போரின்போது வெடிகுண்டுகள் கொண்ட கப்பல் ஒன்று லண்டன் கடலுக்கடியில் இருப்பது பற்றிப் பேசப்படுகிறது. சில காட்சிகளுக்கு முன் ஹோட்டல்அறையில் தங்கியிருக்கும் கமல், செய்தி பார்க்கும்போது இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானில் ஏற்பட்ட தாக்கம் பற்றிப் பேசப்பட்டிருக்கும். இதேபோல் படத்தில் பல காட்சிகள் அமைந்துள்ளன.
நான் லீனியராகக் கதை சொல்லியிருக்கும் இயக்குநர் கமல், சுவாரசியமாக அதை அமைத்திருக்கிறார். பின்னணிக் கதையும் சமகாலமும் பின்னி வரும் முதல் பாதி இழுத்துக்கொண்டேபோவதாகத் தோன்றுகிறது. ப்ரஹிம் அச்சப்பாக்கே, ஃபெரோஸ், பர்வீஸ் ஃபெரோஸ், பர்வீஸ் கான், டி.ரமேஷ், ஸ்டீபன்ரிச்டெர், லீ ஒய்ட்டகெர் ஆகியோர் வடிவமைத்த சண்டைக் காட்சிகள் அனைத்தும் கைத்தட்டல்கள் பெறுகின்றன. முதல் பாகத்தில் வருவதைப் போன்றே இதிலும் மிகக் குறுகிய நேரத்தில் நடக்கும் அபாரமான சண்டைக் காட்சி கிளைமாக்ஸில் இடம்பெறுகிறது.
முதல் பாதி சற்று நீளமாகத் தோன்றினாலும், அதை இரண்டாம் பாகத்தில் ஈடு செய்துள்ளார் இயக்குநர். ஆண்ட்ரியா, கமலுக்கிடையே உள்ள நெருக்கத்தை வைத்து பூஜாவுக்கு ஏற்படும் கேள்விகள் சுவாரஸ்யமான கண்ணாமூச்சி. பல விஷயங்கள் பேசாமலேயே உணர்த்தப்படுகின்றன.
சண்டைக் காட்சிகள், பெரும் மோதல்கள் ஆகிய இடங்களில் மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் கேமிரா நுட்பமாகச் செயல்பட்டுள்ளது.
கமலுக்குத் தன் மீது இருக்கும் அன்பை பூஜா உணரும் இடம் அசல் தமிழ் சினிமாத்தனம். அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கமலுக்கே முக்கியப் பங்கு என்பதும் வழக்கமான தமிழ் சினிமாத்தனம்தான்.
கமல் படங்களில் அவர் முன்னிறுத்தப்படும் விதம் வித்தியாசமாக இருக்கும். தசாவதாரத்தில் பல இடங்களில் விஷ்ணுவின் வடிவமாகச் சித்தரிக்கப்படும் கமல், விஸ்வரூபத்திலும் ‘கடவுள்’ ஆகிவிடுகிறார். கடவுள் உன்னை தண்டிப்பார் என்று பூஜா வில்லனைப் பார்த்துச் சொல்லும்போது கமல் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு பாய்ந்து வருகிறார்.
பல இடங்களில் வசனங்கள் பளிச்சிடுகின்றன. அவற்றில் அரசியல் விமர்சனமும் பெண்ணியக் குரலும் எதிரொலிக்கின்றன. “பொம்பளைய பேச விடாத,நீயும் பொம்பளை மாதிரி பேசாதே” என்று கமலிடம் உயர் அதிகாரி ஒருவர் கூறுவார். பின்னர், தேடுதல் பணிக்குச் செல்லும் கமலிடம் அதே அதிகாரி, காவலர்களைத் துணைக்கு அனுப்புகிறேன் என்று சொல்லும்போது, “எனக்கு இந்த இரண்டு பெண்கள் போதும்” என்பார். கூடவே பெண்களை வரவிடுங்கள், அவர்களிடம் நிறைய சக்தி இருக்கிறது என்பார்.
கோட் சூட் போட்டுக்கொண்டு புரோக்கர் வேலை செய்பவர்கள், டில்லியில் இருந்துகொண்டு கையெழுத்துப் போடுபவர்கள் பேச்செல்லாம் என்னால் கேட்கமுடியாது என்பன போன்ற வசனங்களில் காரமான அரசியல் நெடி. எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமில்லை, தேசத் துரோகியாக இல்லாமல்இருப்பதுதான் முக்கியம் என்ற வசனமும் பொருத்தமான இடத்தில் இடம்பெற்றுள்ளது.
தனது தாயிடம் கமல் வைத்திருக்கும் அன்பைக் காட்டும் அந்த பிளாஷ்பேக் பாடல் உருக்கம். அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரும் தலைகாட்டுகிறார்கள். கமல் தன் அம்மாவைச் சந்திக்கும் இந்தக் காட்சி தமிழ் சினிமாவின் சிறந்த அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் இடம்பெறத்தக்கது.
ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்டரியா ஜெர்மியா, சேகர் கபூர், வகீலா ரகுமான் ஆகியோர் தத்தமது கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். ஆண்டரியாவின் சண்டைக் காட்சி பிரமாதம். இரண்டாம் பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே ராகுல் போஸ் வந்தாலும் அவருக்கான இடம் அழுத்தமாக இருக்கிறது. பூஜா குமார் வெகுளித்தனமான நடிப்பின் மூலம் கவர்கிறார். சேகர் கபூர், கமல் நடிப்பைப் பற்றித் தனியே சொல்ல வேண்டாம்.
சாம்தத் சன்சூதின், சான் வர்கீஸ் ஒளிப்பதிவும், மகேஷ் நாராயண், விஜய் சங்கர் படத்தொகுப்பும் சிறப்பாக அமைந்துள்ளன. முகமது ஜிப்ரானின் பின்னணி இசை தேவையான இடங்களில் தேவைக்கேற்ப அமைந்திருக்கிறது. பாடல் இசை அற்புதம். கலை இயக்குநர் லால்குடி என்.இளைய ராஜா, தன் கைவண்ணத்தின்மூலம் ‘ஆப்கானுக்கு’ நம்மை அழைத்துச் செல்கிறார்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்பதுதான் படத்தின் ஆதாரம். அதை ஒரு இஸ்லாமியர் மூலமாகவே முன்னெடுப்பது கமலின் முத்திரை. இதன் மூலம், இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் பொதுவான இஸ்லாமியர்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று கமல் சொல்லவருகிறார் என்று எடுத்துக்கொள்லலாம். வல்லரசு நாடுகளின் பயங்கரவாதம் குறித்து அவர் எதுவும் பேசவில்லையே என்று முதல் பாகத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை இந்தப் பாகத்தின் மீதும் வைக்கலாம்.
அரசு-அதிகாரவர்க்கத்தினர் நேர்மையாகச் செயல்பட்டால் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்னும் விமர்சனத்தை முன்வைக்கும் விதத்தில் இரண்டாம் பாகம் வித்தியாசப்படுகிறது. இந்திய உயர் அதிகார மட்டத்தில் இருப்பவர்களில் பலரையும் உயர் மட்டத்தில் இருக்கும் சாதியினராகக் காட்டியிருப்பதையும் அவர்களில் சிலரைத் தேசத்துரோகிகளாகவும் சித்தரித்திருப்பதையும் விமர்சனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய அரசு அதிகாரம் இவர்கள் கையில்தான் இருக்கிறது என்று சொல்கிறாரா கமல்?
மொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு படம் என்ற அளவில் விஸ்வரூபம் 2 ஏமாற்றவில்லை. பெரும் எதிர்பார்ப்புக்கு முழுமையாக ஈடுகொடுக்கவில்லை என்றாலும், சிறந்த காட்சியமைப்பு, அபாரமான சண்டைக் காட்சிகள், சூடான அரசியல், நெகிழவைக்கும் இடங்கள், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு ஆகியவற்றால் பளிச்சிடுகிறது இந்த விஸ்வரூபம்.�,”