எதிர்க்கட்சியில் அமரும் சிவசேனா: என்டிஏ கூட்டம் புறக்கணிப்பு!

public

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி, இன்று நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை சிவசேனா புறக்கணித்துள்ளது.

நாளை (நவம்பர் 18) நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை ஆலோசிக்கும் வகையில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேர்தலுக்குப் பின், பாஜகவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் சிவசேனா இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்தது. மகாராஷ்டிரத் தேர்தலுக்கு முன்னர் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாஜக – சிவசேனா, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.

சிவசேனா எம்.பி.யும், மத்திய அமைச்சருமான அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மத்திய கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சராக இருந்தவர். மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியதன் மூலம் 35 ஆண்டுக்காலமாகத் தொடர்ந்த இந்தக் கூட்டணி முறிவுக்கு வந்தது.

தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. இதற்காகக் குறைந்த செயல்திட்டத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், முக்கிய முடிவுகள் இனி வரும் நாட்களில் எடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறவிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) ஆலோசனைக் கூட்டத்தில் சிவசேனா கலந்து கொள்ளுமா எனச் செய்தியாளர்கள் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திடம் நேற்று (நவம்பர் 16) கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “நாளை நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் சிவசேனா சார்பில் எந்தவிதமான பிரதிநிதியும் பங்கேற்கமாட்டார்கள். இந்த முடிவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசிவிட்டுதான் எடுத்தோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “என்டிஏ மீது யாருக்கும் பிரத்யேக உரிமை இல்லை. சிவசேனா, அகாலிதளத்துடன் சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினர்கள். மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலைமை காரணமாக நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கெளரவம் பாதிக்கப்படாமல் இருக்க நாங்கள் பிரிந்துவிட்டோம்” என்றார்.

சிவசேனாவின் மூத்த தலைவரான விநாயக் ராவத் இது பற்றிக் கூறும் போது, “என்டிஏ கூட்டத்தைப் புறக்கணிப்பது கேள்வி அல்ல. கூட்டத்துக்கு நாங்கள் அழைக்கப்படவில்லை, எனவே நாங்கள் செல்லவில்லை. நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கத்தினரா என்பது குறித்து, அது பாஜக தான் தீர்மானிக்க வேண்டும். எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லை என்று எந்த அறிக்கையும் வெளியிடவில்லை” எனக் கூறினார்.

அதே வேளையில், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவின் நினைவு தினம் இன்று. அதனால் அக்கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் மற்றொரு எம்.பி. கூறுகையில், “சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் நினைவுநாள் இன்று (நவம்பர் 17) அனுசரிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் என்டிஏ கூட்டத்தில் எந்த எம்.பி. பங்கேற்க முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.

புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக காங்கிரஸ் – என்சிபி – சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நேற்று (நவம்பர் 16) விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக ஆளுநரைச் சந்திக்க இருந்தது என்சிபி – சிவசேனா முடிவு செய்திருந்த நிலையில், ஆளுநரைச் சந்திக்கவில்லை. விரைவில் ஆளுநரைச் சந்திக்கவுள்ளோம் என இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

விரைவில், என்சிபி தலைவர் சரத் பவார், இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஆட்சியமைப்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்க நேரில் சந்திக்கவுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *