இந்தத் தேர்தலின் மையப் பிரச்சினை எது?
இந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு இந்திய அரசியல் கட்சிகள் திணறிக்கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் ஆளும் பாஜகவாலோ எதிர்க்கட்சிகளாலோ இந்தத் தேர்தலுக்கான மையப் பிரச்சினை எது என்பதை முன்வைத்துப் பிரச்சாரத்தைக் கட்டமைக்க முடியவில்லை.
புல்வாமா தாக்குதலையும் அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலையும் வைத்து தேசப் பாதுகாப்பைத் தேர்தலின் மையப் பிரச்சினையாக்க முயன்ற மோடி அரசு அதில் தோல்வியடைந்துவிட்டது. வேறு எதையாவது பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட மோடி அரசு அதிருப்தியில் இருக்கும் விவசாயிகளைச் சமாதானப்படுத்த முயன்றது. ஊழல் அரசு என முந்தைய காங்கிரஸ் அரசை வசைபாடுகிறது. பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, இஸ்லாமியர்களால் பெரும்பான்மை இந்துக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதான பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றுகொண்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த இஸ்லாமிய எதிர்ப்பு -இந்துத்துவ ஆதரவு அரசியல் வெற்றியைத் தேடித்தந்துவிடும் என்பதுதான் மோடி – அமித் ஷா தலைமையிலான பாஜகவின் ஒரே நம்பிக்கை. அந்தக் கட்சியின் ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் மதசார்பின்மைக்கு ஏதிரான மூர்க்கமான கருத்துகளைப் பார்க்கும்போது பாஜக இதைப் பெரிதாக நம்பிக்கொண்டிருப்பது தெரியவரும்.
**எதிர்க்கட்சிகளும் மதச்சார்பின்மையும்**
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்திய ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கை பற்றிய மோடி அரசின் பெருமிதங்களைக் கேள்விக்குள்ளாக்கவும் கேலி செய்யவும் எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன. மோடி அரசை பாசிச அரசு எனக் கட்டமைப்பதன் மூலம் அதை வீழ்த்திவிட முடியும் என அவர்களால் நம்ப முடியவில்லை. தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சிப்பது தேர்தல் வெற்றிக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும் என அவர்களால் நம்ப முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. மதசார்பின்மையைப் பாதுகாப்பது, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிவயவற்றை தேர்தலின் மையப் பிரச்சினையாக மாற்றுவதற்கு அவை தயங்குவது தெரிகிறது. கடந்த காலங்களில் பாஜக முன்னெடுத்த இந்துத்துவ அரசியல் அதற்குத் தேடித்தந்த வெற்றிகளை அவை கணக்கிலெடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன எனத் தோன்றுகிறது.
இதனால்தானோ என்னமோ, எதிர்க்கட்சிகளில் பலவும் இந்துத்துவத்திற்கு எதிராக மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பாஜக சொல்வது போல் தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் நடிவடிக்கைகளைச் சில சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் குறியீட்டு முறையிலும் மேற்கொண்டுவருகின்றன. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிவற்றை விமர்சிக்கும் அளவுக்கு இந்துத்துவச் செயல்பாடுகளுக்கு எதிரான குரல்கள் தேர்தல் களத்தில் உரத்து ஒலிக்கவில்லை.
**தோல்வி தந்த பாடமா?**
2014 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மதவாத சக்திகளுக்கெதிரான எதிர்ப்புக் குரல்களை அழுத்தமாக முன்வைத்தன. ஆனால், அந்தத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்தன. 2014க்குப் பிறகு மோடியின் தலைமையில் ஊக்கம் பெற்ற சங் பரிவார அமைப்புகள் அடிப்படைவாதச் செயல்பாடுகளை முன்னிலும் தீவிரமாக முன்னெடுத்திருக்கின்றன. கடந்த தேர்தலைக் காட்டிலும் தீவிரமாக அதை எதிர்க்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதைச் செய்யவில்லை. சங்க அமைப்புகளின் பல்வேறு செயல்பாடுகளும் போக்குகளும் எப்படி இந்தியாவின் மதசார்பின்மைக்கும் பன்முகத்தன்மைக்கும் ஊறுவிளைவிப்பவை என்பதை இந்தத் தேர்தலின் மையப் பிரச்சினையாக மாற்றியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறுவதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்துகொண்டிருக்கின்றன.
பசுப் பாதுகாப்பு இயக்கம் இஸ்லாமியர்கள், தலித்துகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் சிலவற்றால் அதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மதசார்பின்மையில் நம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஆதரிக்கவில்லை. பாடத்திட்டத்தில் இந்துத்துவ அடையாளங்களைத் திணிக்க மோடி அரசும், பாஜக தலைமையிலான மாநில அரசுகளும் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்க நாடு தழுவிய அளவில் போராட்டங்களை ஒருங்கிணைக்க அவை தவறிவிட்டன.
இந்துக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக விளங்கிய விநாயகர் சதுர்த்தி போன்றவற்றை அரசியல்மயப்படுத்த சங் பரிவார அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவற்றை அரசியல் ரீதியில் பலப்படுத்தியிருக்கின்றன. தூய்மை இந்தியா திட்டம்கூட இந்துத்துவ அடிப்படைவாதத்தின் அடையாளங்களுடன் முன்னெடுக்கப்பட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதை ஆன்மிகச் செயல்பாடாகப் பிரச்சாரம் செய்த பாஜகவின் நடவடிக்கை அரசியல் ரீதியானது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டதாகக்கூடத் தெரியவில்லை.
சபரிமலையில் குறிப்பிட்ட வயதிலான பெண்கள் நுழைவதற்கு இருந்துவந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதை ஒட்டி எழுந்த சர்ச்சைகளையும் போராட்டங்களையும் அரசியல் ரீதியில் சாதகமாக்கிக்கொள்ள முயன்றது பாஜக. அதை மனித உரிமை சார்ந்த பிரச்சினையாகவும் இந்து மதத்தில் நிலவிவரும் பெண்களுக்கெதிரான நடைமுறையாகவும் புரிந்துகொள்ளவும் வாசிக்கவும் அவை சார்ந்த உரையாடல்களை முன்னெடுக்கவும் முற்போக்கு சக்திகளைத் திரட்டிப் போராடவும் எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயன்ற பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுசாரி அரசு தனிமைப்படுத்தப்பட்டது. தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ள பாஜக குறைந்தபட்சம் கேரளத்தில் தனது நிலைகளைப் பலப்படுத்திக்கொள்ள முடியும் என நம்பியிருக்கக்கூடும்.
**தமிழகக் கட்சிகளுக்கு பாஜக ஏற்படுத்தும் நெருக்கடி**
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக மேற்கொண்டுவரும் செயல்பாடுகளைக் கவனித்தால் அது தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாகச் செல்வாக்குப் பெற்று விளங்கிவரும் திராவிட இயக்க அரசியலுக்கு எதிரானவை என்பது புரியவரும். திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம் என்பதைத் தன் கனவாக முன்வைத்து அரசியல் செய்துவரும் பாஜக, திராவிட இயக்கத் தலைவர்களை, குறிப்பாகப் பெரியாரை, இழிவுபடுத்தும் நடவடிக்கைகளை வெளிப்படையாகவே செய்துவருகிறது. தமிழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுவரும் இந்து ஆன்மிகச் செயல்பாடுகளின் பின்னணியில் பாஜகவும் சங் பரிவார அமைப்புகளும் இருப்பது ரகசியமான செய்தி அல்ல. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக கடந்த காலங்களில் பாஜக முன்னெடுத்த பிரச்சாரங்கள் சிறுபான்மையினர் வலுவாக உள்ள கன்னியாகுமரி, கோவை போன்ற இடங்களில் அதற்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றன.
தனது கோட்பாட்டு ரீதியான எதிரிகளான திமுக, அதிமுகவுடன் வாய்க்கும்போது தேர்தல் உடன்பாடுகளை மேற்கொண்டு தமிழகத்தில் தன்னை வலுப்படுத்திக்கொண்டுள்ள பாஜக, அக்கட்சிகளால் திராவிட இயக்கச் சித்தாந்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத அரசியல் நெருக்கடிகளை உருவாக்கிச் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி, 1999இல் பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல என அறிவிக்கும் நிலை உருவானது பாஜவின் வெற்றியா அல்லது அது வெறும் திமுகவின் தேர்தல் அரசியலா என்பது முக்கியமான கேள்வி.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என விளக்கமளிக்க முயன்றுவருகிறார்கள். இந்துக் கோயில்களுக்கு விஜயம் செய்கிறார்கள். தீவிர பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றிவரும் திமுகவின் கனிமொழி வெற்றிபெறுவதற்காக அவரது தாயார் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டது பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன. அதை திமுக தலைமையோ கட்சியினரோ விமர்சித்திருப்பதாகத் தெரியவில்லை. பாஜகவின் மதவாதத்திற்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் குரல்கொடுக்க தேர்தல் களத்தில் வலுவான குரல்கள் ஒலிக்கவில்லை. திமுக உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர் ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சுமத்தியிருக்கின்றன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவைத் தன் பிடிக்குள் கொண்டுவந்து தேர்தல் உடன்பாடு கொண்டுள்ள பாஜக திராவிட இயக்க எதிர்ப்பு அரசியல் தனக்குக் கைகொடுக்கும் என நம்புகிறது. திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் மதச்சார்பின்மையையும் கடுமையாக எதிர்க்கும் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைத் தனது வேட்பாளர்களில் ஒருவராக நிறுத்தியிருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தத் துணிச்சல் எந்த நம்பிக்கையிலிருந்து உருவானது?
(அலசல் நாளை தொடரும்)
�,”