எதிர்க்கட்சிகளுடன் முதல்வர் ஆலோசித்திருக்க வேண்டும்!

Published On:

| By Balaji

கஜா புயல் பாதிப்புகள் தொடர்பாக திமுக அரசியல் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல்வர் டெல்லி செல்வதற்கு முன்பு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்திருக்க வேண்டும்” என்றும் விமர்சித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் மற்றும் தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை அனுப்பிவருகின்றனர். திமுக சார்பில் தமிழகம் முழுவதிலிருந்து 60 லாரிகள் நிறைய நிவாரண பொருட்கள் திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் நிகழ்வு திருச்சி கலைஞர் அரங்கத்தில் இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து லாரிகளை வழியனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டு நாட்கள் பார்வையிட்டுள்ளேன். மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில், 4கோடி ரூபாய் மதிப்புடைய நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

“மீட்புப் பணிகளை திமுக அரசியலாக்கிவருகிறது என்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேவையற்ற, தவறான செய்தியைக் கூறுகின்றனர். ஆனால் திமுக எவ்வித அரசியலையும் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் திமுக செயலாற்றிவருகிறது” என்று விளக்கிய ஸ்டாலின்,

புயல் பாதிக்கப்பட்ட மறுநாளே முதல்வர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டும் ஆனால் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டுள்ளார். 5 மணி நேரம் கூட முதல்வர் ஆய்வில் ஈடுபடவில்லை. வேறெந்த மாநிலத்திலும் மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரு முதல்வர் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு செய்திருக்கிறார் என்று விமர்சனம் செய்தார்.

“மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்கியிருக்க வேண்டும், ஆனால் வழங்கவில்லை. பிரதமரிடம் நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாயும், உடனடியாக 1500 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வழங்குவார்களா என்பது கேள்விக்குறிதான் என்று குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட தற்போது அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “திமுக ஆட்சி போய் 10 வருடங்கள் ஆகப்போகிறது. ஆனாலும் திமுகவை ஒப்பிடும் பழைய பல்லவியைத்தான் பாடிக்கொண்டிருக்கின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு இருந்த விலைவாசியின், பொருளாதாரச் சூழல் அடிப்படையில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது நிதி தர மாட்டேன் என்பதை சொல்லாமல் ஒப்புதல் வாக்குமூலத்தைத்தான் முதல்வர் அளித்துள்ளார்” என்று பதிலளித்தார்.

“திமுக ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக இருக்கிறது. நாங்கள் எங்களது நிதியான 1 கோடி ரூபாயை தபாலில் அனுப்பியிருக்கலாம். ஆனால் அரசியல் பார்க்காமல் முதல்வரை நேரில் சந்தித்து அளித்துள்ளோம். முதல்வர் டெல்லிக்குச் செல்வதற்கு முன்னால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவசாயிகள், மீனவர்கள், அரசியல் கட்சிகளை ஆலோசித்து சேத மதிப்பீடுகள் குறித்து அறிந்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் மீது குறைகூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், இது மக்கள் பிரச்னை, அரசியல் பிரச்னைகளைப் பற்றி இதில் பேச வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

மேலும், “இவர்கள் செய்துகொண்டிருக்கும் ஊழல்கள், கலெக்‌ஷன், கரெப்ஷனுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. அதற்காக இவர்கள் இணக்கமாக இருக்கிறார்கள். இணக்கமாக செயல்படுவதாக இருந்தால் போராடி இன்றைக்கே நிதியை பெற்றுத் திரும்ப வேண்டும்” என்றும் ஸ்டாலின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share