எதிர்க்கட்சிகளிடம் பேச மாயாவதி – அகிலேஷ் திட்டம்!

Published On:

| By Balaji

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்து, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்று அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவிலேயே 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒரே மாநிலம் என்பதால் மத்தியில் அமையும் ஆட்சியைத் தீர்மானிப்பதில் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு தனிப்பங்கு உண்டு. இந்த 80 தொகுதிகளில் கடந்தமுறை பாஜக 71 தொகுதிகளை வென்றிருந்தது. பாஜக அரசு 2014ஆம் ஆண்டில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்ததற்கு உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் எதிரும், புதிருமாக இருந்த அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இம்முறை ஓரணியில் திரண்டனர்.

தேசிய அளவில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறியிருந்தாலும், அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணியே உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களைப் பெறும் என்றும் கூறியுள்ளன. 7 கட்ட தேர்தல் முடிந்து, வாக்குக் கணிப்புகள் தங்களுக்கு சாதகமான நிலையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இன்று அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தங்களுக்கு இருக்கும் சாதக பாதகங்கள் குறித்தும், வாக்கு கணிப்புகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் இருவரும் ஆலோசனை செய்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “எங்கள் கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் 56 தொகுதிகளில் வெல்லும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பேசுகிறோம்” என்று கூறினார். தேர்தல் முடிவு வெளியான பிறகு மே 24ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நபர் *ஐ.ஏ.என்.எஸ்.* ஊடகத்திடம் பேசுகையில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் மே 24ஆம் தேதி தொலைபேசி மூலம் பேச திட்டமிட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை, மாயாவதி இன்று (மே 20) டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகச் செய்திகள் பரவிய நிலையில், அகிலேஷ் மாயாவதி சந்திப்பு நடந்துள்ளது. ”மாயாவதிக்கு இன்று டெல்லியில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று அவருடைய உதவியாளர் சதீஷ் சந்த்ரா மிஸ்ரா *ஏ.என்.ஐ.* ஊடகத்திடம் பேசுகையில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே காங்கிரஸ் கூட்டணியில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி இணையுமா அல்லது தேசிய அளவில் மாநிலக் கட்சிகளை இணைத்து மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்குமா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share