தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி வழக்கு தொடர்ந்திருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பணம் மற்றும் தங்கம் கொடுத்ததாக அங்கிருந்து தப்பிவந்த சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாகவும் எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று (டிசம்பர் 10) மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி , அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது அரசு தரப்பில் இதுதொடர்பாக ஏற்கனவே சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.�,