எங்க மாப்பிள்ளை மோடி… உங்க மாப்பிள்ளை யாரு? செல்லூர் ராஜூ பஞ்ச்!

Published On:

| By Balaji

மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்காக சமூக தளங்களில் களமாட வேண்டியது எப்படி என்று விளக்கும் கருத்தரங்கம் நமோவாரியர்ஸ் அமைப்பு சார்பில் மதுரையில் இன்று (மார்ச் 30) நடைபெற்றது.

இதில் பாஜகவின் தேசியச் செயலாளர் முரளிதர் ராவ் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். நிகழ்வில் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் வேட்பாளர் ராஜ் சத்யனின் தந்தையுமான முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

செல்லூர் ராஜூ பேச அழைக்கப்பட்டபோது எழுந்த கரவொலியும், விசில் சத்தமும் முரளிதர் ராவையே ஆச்சரியப்படுத்தியது.

“நேரமில்லை… இல்லேன்னா உங்க கூட கலாய்ச்சு பேசிக்கிட்டிருப்பேன். வேட்பாளர் இன்னிக்குதான் மாநகருக்குள்ள வர்றாரு. அதனால நாங்க சீக்கிரம் போகணும்” என்றபடியே ஆரம்பித்தார் செல்லூர் ராஜூ.

“மோடிஜியின் பக்தர்கள்தான் தேச பக்தர்கள். மோடிஜிதான் நாட்டின் அரசியலில் சூப்பர் ஸ்டார். அவரை விட்டால் வேறு யாருமில்லை. அதிமுகவும் பாஜகவும் இயற்கையான கூட்டணி. தண்ணியும் பாலும் சேர்ந்தா எப்படி இருக்குமோ அதுபோல இயல்பான, இயற்கையான கூட்டணி. இலை தளதளனு இருந்தாதான் பூ பூக்கும். பூ நல்லா பூத்தாதான் பழம் பழுக்கும். பழம் பழுத்தாதான் முரசு ஒலிக்கும்” என்று பஞ்ச் ஆகவே பேசிக்கொண்டு வந்த செல்லூர் ராஜூ அடுத்துப் பேசியபோது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

”இப்ப நாம பொண்ணு பார்க்கப் போறோம்னா என்ன சொல்லுவோம்? இன்னார்தாங்க மாப்பிள்ளை பாத்துக்கங்கனு கேட்போம். அதுபோல இப்ப நாம மக்கள்கிட்ட பொண்ணு பாக்கப் போறோம். எங்க மாப்பிள்ளை மோடிஜி. நாங்க எங்க மாப்பிள்ளை பேரைச் சொல்லி பொண்ணு கேக்குறோம்.

ஆனா எதிர்க்கட்சிக்காரங்களோட மாப்பிள்ளை யாரு? நீங்க பொண்ணைக் கொடுங்க. நாங்க பத்து பேர் இருக்கோம், பேசி மாப்பிள்ளைய முடிவு பண்ணிக்கிறோம்னு சொன்னா அவங்கள வீட்டுக்குள்ள விடாதீங்கடானு விரட்டுவாங்க. மோடிதான் நம்ம மாப்பிள்ளை. மோடிதான் இந்திய நாட்டின் நிரந்தரப் பிரதமர்” என்று சொல்லி முடித்தார் செல்லூர் ராஜூ.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share