எங்களை நம்பினால் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு: பாஜக சர்ச்சை!

Published On:

| By Balaji

கர்நாடகாவில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் இடம்பெறாதது குறித்துப் பேசிய பாஜகவைச் சேர்ந்த ஈஸ்வரப்பா, எங்களை நம்பினால் முஸ்லிம்களுக்குத் தேர்தலில் சீட் தருவோம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 18 மற்றும் 23ஆம் தேதியன்று இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமல், 28 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது.

நேற்று (ஏப்ரல் 1) கொப்பல் நகரில் குருபர் மற்றும் இதர சிறுபான்மைச் சமூகத்தினர் இடையே உரையாற்றினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா. இவர், 2012-13ஆம் ஆண்டு ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராகப் பதவி வகித்தவர். குருபர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான தலைவராகக் கருதப்படுபவர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடையே பேசிய ஈஸ்வரப்பா, தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பளிக்காதது குறித்துப் பேசினார். “உங்களை (முஸ்லிம்கள்) வாக்கு வங்கியாகத்தான் காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. ஆனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காது. நாங்களும் உங்களுக்கு சீட் தரவில்லை. காரணம், நீங்கள் எங்களை (பாஜக) நம்பவில்லை. எங்களை நம்புங்கள்; நாங்கள் உங்களுக்கு தேர்தலில் நிற்க சீட் தருகிறோம்” என்று அக்கூட்டத்தில் பேசினார் ஈஸ்வரப்பா. இது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கர்நாடகாவில் நடந்த கூட்டமொன்றில் பேசியபோதும், இதுபோன்ற சர்ச்சையை உண்டாக்கினார் ஈஸ்வரப்பா. அப்போது, பாஜகவுடன் இணைந்து செயல்படும் முஸ்லிம்களே நல்லவர்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். “காங்கிரஸ் கட்சியோடு இணைந்திருக்கும் முஸ்லிம்கள் 22 ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செயல்பாட்டாளர்களைக் கொன்றிருக்கின்றனர். அதே நேரத்தில், நல்ல முஸ்லிம்கள் பாஜகவோடு இணைந்திருக்கின்றனர்” என்று கூறியிருந்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share