{ஊழல் குற்றச்சாட்டு: பிரதமர் அலுவலகம் மறுப்பு!

Published On:

| By Balaji

மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்த தகவலை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய விஜிலன்ஸ் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியபோது, எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் இந்திய வனத் துறை அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி. மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல் வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்தத் தகவலை தரப் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட செயற்பாட்டாளர்கள் குறித்து அவ்வப்போது புகார்கள் தங்களுக்கு வந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், “இவை போலியான மற்றும் அடையாளமற்ற புகார்களையும் உள்ளடக்கியவை. குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையைக் கருத்தில்கொண்டு இந்தப் புகார்கள் முறையாக ஆய்வு செய்யப்படுகின்றன” என்றும் பதிலளித்துள்ளது.

அவசியமான நடவடிக்கைகள் எடுத்த பின்னர், இந்தத் தகவல்கள் ஒரே இடத்தில் வைக்கப்படுவதில்லை என்றும் அவை அலுவலகத்தின் பல்வேறு துறைகளிலும் அலகுகளிலும் சிதறி உள்ளன என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஊழல் சார்ந்த மற்றும் ஊழல் சாராத விவகாரங்களை இந்தப் புகார்கள் உள்ளடக்கியதாகத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், “மனுதாரர் ஊழல் தொடர்பான மனுக்கள் குறித்த தகவலை மட்டுமே கேட்டுள்ளார்.

ஊழல் தொடர்பான புகார்கள் என இதனை ஆராய்ந்து அடையாளம் காண்பது என்பது சிக்கலானது. இதற்காக ஏராளமான கோப்புகளில் முழுமையான தேடலை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளது.

ஒரு தகவலை தரும்போது அந்த அலுவலகத்தின் வள ஆதாரங்கள் திசை திருப்பப்படாமல் இருக்கப்பட வேண்டும் அத்தகைய சூழ்நிலையிலேயே தகவலைத் தர முடியும் எனச் சட்ட விளக்கத்தையும் பிரதமர் அலுவலகம் மேற்கோள் காட்டியுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share