சங்கத்தில் தலைமை பதவியில் இருப்பவர்கள் பிறருக்கு முன் உதாரணமாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டியவர்கள். ஆனால், தங்களை நம்பியிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களை வைத்து டிஜிட்டல் நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் வருமானம் பெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
தங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று இவர்களை நம்பி வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தியேட்டர் உரிமையாளர்கள் இதையறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். படங்களை தியேட்டர்களில் திரையிட இனிமேல் நாங்கள் கட்டணம் செலுத்த மாட்டோம் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தபோது அது நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டது.
அது சம்பந்தமாக விவரங்கள் படிப்படியாக பொதுவெளியில் விவாதப் பொருளாக மாறியபோது டிஜிட்டல் நிறுவனங்களின் கைப்பாவைகளாக, ஏஜெண்டுகளாக, தரகர்களாக மாறி சிலர் பேசத் தொடங்கினார்கள்.
தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிட நிறுவப்பட்ட புரஜெக்டர் விலை கொடுத்து வாங்கப்படவில்லை. எனவே அதற்கான வாடகை மற்றும் திரையிடும் சர்வீஸ் கட்டணம்தான் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் செலுத்தி வந்த VPF கட்டணம் என கியூப் நிறுவனம் அறிவித்திருந்தது.
திரையரங்கு நடத்துவதற்கு அடிப்படையாகச் சில வசதிகள் உரிமையாளரால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில் படம் காட்டும் கருவி முக்கியமானது. அப்போதுதான் அரசு உரிமம் வழங்கும். பிரின்ட் காலத்தில் சொந்தமாக புரஜெக்டர்கள் வைத்திருப்பதைப் பெருமைக்குரிய விஷயமாக தியேட்டர் உரிமையாளர்கள் கருதினர். அதைக் கடைப்பிடித்தனர்.
டிஜிட்டல் முறைக்கு தியேட்டர்கள் மாறியபோது படம் திரையிட பயன்படும் மெஷினை சொந்தமாக வைத்துக் கொள்ளவில்லை. அதை டிஜிட்டல் கம்பெனிகள் வலியுறுத்தவில்லை. ரூபாய் ஐந்து லட்சம் விலையுள்ள மெஷினுக்கு வாராவாரம் 13,000, 14,000 எனத் தயாரிப்பாளர்கள் பணம் கட்டியிருப்பதன் மூலம் ஒவ்வொரு தியேட்டரிலும் மெஷின் விலையைவிட பன்மடங்கு பணம் கியூப் நிறுவனத்துக்குப் போய் சேர்ந்து இருப்பதைப் புள்ளிவிவரங்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
இது பகல் கொள்ளை, திரையரங்குகளும், தயாரிப்பாளர்களும் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என விஷால் கூறியபோது நியாயங்கள் பேசும் திருப்பூர் சுப்பிரமணி கியூப்புக்கு ஆதரவு நிலை எடுத்தார்.
தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்தபோது கார்ப்பரேட் நிறுவனங்களான சத்யம், ஐநாக்ஸ், PVR, AGS இவர்கள் நடத்துகின்ற திரைகளில் இருப்பது சொந்த மெஷின்கள். இதே போன்று 242 திரைகளில் சொந்தமாக தியேட்டர் உரிமையாளர்கள் நிறுவி இருப்பது தெரியவந்தது.
இந்தத் திரைகளில் திரையிடப்படும் படங்களுக்குத் தயாரிப்பாளர்களால் செலுத்தப்பட்ட VPF தொகை கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூபாய் 180 கோடி (242 x 15000=36,30,000 X 52 =18,87,60000 ஒரு வருடக் கணக்கு ) செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணம் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் தயாரிப்பாளர்கள் சங்கச் செலவில் அனைத்து தியேட்டர்களுக்கும் சொந்தமாக புரஜெக்டர் நிறுவ முடியும்.
கியூப் நிறுவனம் சொந்த புரஜெக்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் தயாரிப்பாளர் செலுத்திய VPF தொகையைக் கொடுக்கவில்லை.
சென்னை தியேட்டர்களுக்கும் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு நிலை எடுத்து வருபவர்களுக்கு மட்டும் கடந்த பத்தாண்டுகளாக வழங்கி வந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அதை நியாயப்படுத்தும் வகையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் பேசியுள்ள ஆடியோ திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்தமாக புரஜெக்டர் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான தியேட்டர் உரிமையாளர்கள் கியூப் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது எந்தப் பதிலும் இதுவரை இல்லை. ‘வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு கேட்கும் தலைவர்கள் எங்களை வைத்து தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியை எங்களுக்கு சொல்லித் தராமல் மறைத்தது எந்தவகையில் நியாயம்? இவர்களை நம்பி எப்படிப் போராடுவது?’ என்ற அதிருப்தி குரல்கள் தமிழ்நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது. இதைச் சமாளிக்க நாளை சென்னையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரையரங்கு உரிமையாளர்கள் – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள ரோகிணி பன்னீர்செல்வம் Vs ஆர்.கே.செல்வமணி ஆடியோ பேச்சின் பின்னணியும் உண்மையும் என்ன? என்பது பற்றிய சிறப்புக் கட்டுரை 7 மணி பதிப்பில்…�,