அவசியமில்லாமல் வெளியே வந்தால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக்கொள்ள மட்டும் வெளியே சென்றுவரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் மீது காவல் துறையினர் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்.இதனால் தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சாலையில் செல்பவர்கள் மீது தடியடி நடத்துகிறார்கள். சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர, அவர்களை துன்புறுத்த காவல் துறைக்கு உரிமையில்லை” என்று தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக இவ்வழக்கு வீடியோ கால் (zoom app) மூலம் இன்று (மார்ச் 30) நீதிபதி வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பு வழக்கறிஞரும் வீட்டிலிருந்தபடியே தங்களது வாதத்தை எடுத்துவைத்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “பொதுமக்களிடம் எந்தவொரு விதிமுறை மீறலும் நடைபெறவில்லை. ஊரடங்கை மீறிய 17, 118 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையாகவே காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மனுதாரர் எந்தவொரு சம்பவத்தையும் முன்வைத்து மனுவை அளிக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக குறிப்பிட்ட எந்த உத்தரவையும் தங்களால் பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்தனர்.
மேலும், “காவல் துறையினர் நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும். மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று காவல் துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்.
“தமிழகத்தின் கடைக்கோடி மனிதனும் தடை உத்தரவால் பாதிக்கப்படக்கூடாது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியாது” என்றும் குறிப்பிட்டனர்.
எழில்�,