கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு இன்று (ஏப்ரல் 6) 12ஆவது நாளை எட்டியுள்ளது. ஊரடங்கு கடுமையாக உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குக்கூட யாரும் வெளியில் செல்ல முடியவில்லை. கடைவீதிகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு வந்தாலும்கூட காவல் துறையினர் அடித்து விரட்டுவதைத் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்து வருகிறோம்.
இதன் காரணமாக மருத்துவமனை செல்வது, அவசரத் தேவை உள்ளிட்டவற்றுக்குக்கூடச் செல்லாமல் பொதுமக்கள் தவித்துவந்தனர். இது தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காகப் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையே அல்லது வெளிமாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் அவசர பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.
சில தினங்களுக்கு முன்பு அவசர பாஸ் வாங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவந்த தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மட்டுமே அனுமதி அட்டை வழங்குவார்கள் என்று தெரிவித்தது. பின்னர், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நேரில் வராமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பலரும் தங்களின் அவசரத் தேவைகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை மக்களுக்கு எந்த அளவு பயனளிக்கிறது என்பதை அறிய நாம் கள விசாரணையில் இறங்கினோம்…
**சம்பவம்-1**
அவசரத் தேவைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) வெளியிட்ட ஆன்லைன் ஐடி http://serviceonline.gov.in மூலம் நாம் விண்ணப்பிக்க முயன்றபோது முகவரி பயனில் இல்லை (invalid) என்ற தகவல் வந்தது. கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியை தொடர்புகொண்டு விவரங்களை எடுத்துக்கூறினோம். 1077 என்ற இலவச எண்ணுக்குத் தொடர்புகொள்ளக் கூறினார். தொடர்புகொண்டோம். எதிர்முனையில் ‘காவல்துறை உதவிக்கு எண் 1ஐ அழுத்தவும் இல்லையெனில் வெளியேறவும்’ என்ற கணினி குரல் கேட்டது. எண் 1ஐ அழுத்தினோம். காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது.
நம்மிடம் பேசிய ஊழியரிடம், “துக்க நிகழ்ச்சிக்குச் செல்ல கார் பாஸ் வாங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட ஆன்லைன் ஐடி இன்வேலிட் என்று வருகிறது” என்று சொன்னோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 04142-230999 எண்ணை நமக்கு அளித்துப் பேசச் சொன்னார். பலமுறை முயற்சி செய்த பிறகு யார் நீங்கள் என்றது ஒரு குரல்.
நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “துக்க நிகழ்வுக்காக கார் பாஸ் வாங்க நீங்கள் அறிவித்த ஆன்லைன் முகவரிக்கு விண்ணப்பிக்கச் சென்றோம். ஆனால், அது பயனில் இல்லை என்று காட்டுகிறது” என்றோம். எதிர்முனையில் பேசியவர் deo//cuddalore.yahoo.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கச் சொன்னார். அதில் இன்னொருவரின் பெயரில் இருந்து விண்ணப்பித்தோம். ஆனால், எந்தவித பதிலும் நமக்கு வரவில்லை.
**சம்பவம்-2**
கடலூர் மஞ்சை நகரைச் சேர்ந்த கண்ணன் சென்னையிலிருந்து நம்மைத் தொடர்புகொண்டார்.
“சென்னையிலுள்ள என்னுடைய தங்கை வீட்டுக்கு வந்திருந்தேன். கடலூருக்குத் திரும்ப முடியவில்லை. வெளியூர் செல்ல விரும்புவோர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுச் செல்லலாம் என்று கேள்விப்பட்டேன். அங்கும் இங்கும் அலைந்து மூன்று நாட்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகம் சென்று விண்ணப்பம் அளித்தேன். இறப்புக்கு மட்டும்தான் செல்லலாம் என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார்கள்.
தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்ததும், நேற்று (ஏப்ரல் 5) மீண்டும் விண்ணப்பித்தேன். வேறு காரணங்களைக் கேட்டார்கள். வீட்டில் 60ஆவது ஆண்டு திருமணம் நடைபெறுகிறது, அதற்குச் செல்ல வேண்டும் என்று அழைப்பிதழுடன் அனுமதி கேட்டேன். ஆனால், அனுமதி இல்லை என்ற செய்திதான் எனக்கு வந்தது” என்று கூறுகிறார்.
**சம்பவம்-3**
பண்ருட்டி வழக்கறிஞர் ராஜசேகர் தனக்கு ஏற்பட்ட சிரமங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“சென்னையில் எனது அக்கா கணவர் இறந்துவிட்டார் என்ற துக்க செய்தி நேற்று ஏப்ரல் 5ஆம் தேதி காலை வந்தது. டோல்ஃப்ரி என அனைத்து எண்ணுக்கும் கால் செய்துவிட்டேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. மாவட்ட நிர்வாகம் கொடுத்த ஆன்லைன் முகவரியில் விண்ணப்பித்தால் ஒரு ஐடி இன்வேலிட் என்றே வருகிறது. இன்னொரு ஐடிக்கு அனுப்பிய விண்ணப்பத்துக்கு மாலை 4.00 மணி வரையில் ரெஸ்பான்ஸ் இல்லை. அனுமதியின்றி சென்றாலும் சாலையில் வழிமறித்து நாயை அடிப்பது போல அடிப்பார்கள்.
வருவாய் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனைவரும் பணிகளைக் கவனிக்காமல் விளம்பரத்துக்காக ஏனோதானோவென்று பணியைச் செய்கிறார்கள். என் அக்கா கணவர் இறப்புக்கே போக முடியாதபடி அதிகாரிகளின் அலட்சியம் இருந்துவிட்டது. சட்டம் படித்த வழக்கறிஞரான எனக்கே எந்த நிலைமை என்றால் சாதாரண கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள். இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? இன்வேலிட் ஐடியைக் கொடுத்து விண்ணப்பிக்கச் சொல்வது கேவலம் இல்லையா? அரசு அதிகாரிகள் வீட்டுப் பிரச்சினைகள் என்றால் தமிழக அரசு வாகனத்தில் ஆன் டூயூட்டி என்று போட்டுக்கொண்டு 144 தடையை மீறிப் போகிறார்கள்” என்று வேதனைப்பட்டார்.
**சம்பவம்-4**
பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டை சுப்பிரமணியன் என்பவர் பண்ருட்டி வட்டாட்சியரிடம் மூன்று நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தார். “எனது மகள் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். பண்ருட்டி வரமுடியாத சூழ்நிலையில் தெரிந்தவர் வீட்டில் தங்கியிருக்கிறார். மகளின் குழந்தை பாட்டி வீட்டில் தனியாக அம்மாவைக் கேட்டு அழுதுகொண்டிருக்கிறது. எனவே, மகளை அழைத்துவர அனுமதி வேண்டும் என்று கேட்டேன். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை” என்று கலங்கினார்.
இதுபோலவே அனைத்து மாவட்டங்களிலும் ரத்த உறவுகளின் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்குக்கூடச் செல்ல முடியாத அளவு ஆன்லைன் விண்ணப்பித்தல் இருக்கிறது. வெளியூர் செல்வதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்படுமா என்பதுதான் பொது மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
**எம்.பி.காசி**�,