�கன்னியாகுமரியில் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்ட ரப்பர் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. ரப்பர் மரங்களில் பால் வெட்டுதல், பால் சேகரித்தல், தோட்டப் பராமரிப்பு எனப் பல்வேறு பணிகளுக்காக நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் என சுமார் 3,000 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கான ஒப்பந்த ஊதியம் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து கடந்த இரண்டாண்டுகளில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை அரசு சரியான முடிவு எடுக்கவில்லை.
இதனால், ரப்பர் கழகத்திற்கு எதிராகக் கடந்த 4ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகளுடன், ரப்பர் கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவித உடன்பாடும் இல்லாததால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஒரு கிலோ காய்ந்த ரப்பர் ரூ.80 முதல் ரூ.100 மதிப்புள்ளதாகும். வழக்கமாக வழங்கி வந்த ரப்பரைவிடக் குறைந்த எடையில் ஊழியர்கள் ரப்பர் வழங்கி வருகின்றனர். எத்தனை கிலோ எடை குறைகிறதோ அதற்குரிய தொகை உங்களிடமிருந்து வசூல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொழிலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.�,