காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்த நிலையில் உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என மத்திய அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 13ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அருண் ஜெட்லி அமெரிக்காவுக்குச் சென்றதால், அவர் வகித்து வந்த நிதி அமைச்சர் பதவி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட்டை பியூஷ் கோயல் தான் தாக்கல் செய்தார்.
எனினும் அமெரிக்காவில் இருந்தபடியே, பட்ஜெட் உள்ளிட்ட விவரங்களை அருண் ஜெட்லி கவனித்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து இரு தினங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார் அருண் ஜெட்லி. பிரதமர் மோடியின் பரிந்துரையின் படி அவருக்கு நிதியமைச்சகம் மற்றும் கார்ப்பரேட் அமைச்சகத்தை ஒதுக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். அதன்படி இன்று (பிப்ரவரி 15), நிதி அமைச்சராக மீண்டும் பதவியேற்று கொண்டார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இந்தக் கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல்கள் குறித்துப் பல விவாதங்கள் நடைபெற்றதாகவும், ஆனால் அவை அனைத்தையும் வெளியில் பகிரமுடியாது. இந்தத் தாக்குதலை தொடர்ந்து உலக அரங்கில் பாகிஸ்தானை தனித்து விட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும், இதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த மோசமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த வீரர்களின் உடல்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அருண் ஜெட்லி வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றார். புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள் எனவும் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தும் திரும்ப பெறப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
ஆனால், தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கை விரித்துள்ளது.�,