கிமு 6 ஆம் நூற்றாண்டில், மிகச்சிறந்த உலோகக்கலவைகள் தமிழ்நாட்டின் சேர சாம்ராஜ்ஜியத்தில் இருந்து உலகெங்கிலும் பரவியதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
பெங்களூருவிலுள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் (என்ஐஏஎஸ்) பேராசிரியர் ஷரதா சீனிவாசன் வெளியிட்ட இரண்டு முக்கியமான ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பேராசிரியர் ஷரதா சீனிவாசன், சில காலமாக எஃகு உலோகங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றவர். வரலாற்றுடன் உலோகவியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர் இவர்.
ஆரம்பகால உலோகவியல் குறித்த கண்டுபிடிப்புகள், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் அதிகம் கிடைத்திருப்பதை நாம் அறிவோம். கிடைத்திருக்கக் கூடிய இக்கலைப்பொருட்கள், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஷரதா சீனிவாசன், தனது ஆராய்ச்சிக்காக இந்த கலைப்பொருட்களை மிக நெருக்கமாக ஆய்வு செய்த போது பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
பேராசிரியர் ஷரதா எலக்ட்ரான் நுண்ணோக்கின்(electron microscope) கீழ் இந்த உலோகக் கலைப்பொருட்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார். மிகவும் சிக்கலான, துளையிடப்பட்ட வடிவமைப்பில் அவையிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிநவீன உலோகவியல் செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இதனை அடைய முடியும் எனக் கூறுகிறார் பேராசிரியர் ஷரதா. மேலும் பலகட்ட சோதனைகள், பிழைகள் மூலம் இதனை சாத்தியப்படுத்தியிருக்கின்றனர் பண்டைய தமிழர்கள் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
முன்னதாக, இது போன்ற உலோகக்கலவைகள் வார்ப்பிரும்பு மற்றும் பல்வேறு வழிகளில் செய்யப்பட்ட இரும்புடன் கார்பனைச் சேர்ப்பதன் மூலமாக செய்யப்படும் எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அல்ட்ராஹை-கார்பன் எஃகு மூலம் உண்டாக்கிய கலைப்பொருட்களை, எந்த நுட்பத்தை கொண்டு தமிழர்கள் உருவாக்கினர் என்பதை உறுதியாக நிரூபிக்கும் ஆதாரங்களை கண்டுபிடிப்பது கடினமாக இருந்து வந்தது.
பேராசிரியர் ஷரதா, கடைசியாக இதற்கான விடைகளை கண்டுபிடித்திருக்கிறார். தனது புதிய ஆய்வறிக்கையில், இரும்பு பூக்களை(iron blooms) மரம் போன்ற கார்பனேசிய பொருட்களுடன் பொதி செய்வதன் மூலமும்; 1,400 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான உயர் வெப்பநிலையில் நீண்ட நேரம் சுடுவதன் மூலமும் மட்டுமே இந்த வகை உயர் கார்பனேசிய எஃக்கின் தன்மையை அடைய முடியும் என்று தனது ஆராய்ச்சியின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் மட்டுமே நிலவி வந்த தனித்துவமான இந்த செயல்முறையை, உலோகவியலைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்ட திறமையான பணியாளர்களால் மட்டுமே அந்தக் காலத்தில் அடைய முடிந்திருக்கிறது.
மேலும் பேராசிரியர் ஷரதா, கிமு 6 ஆம் நூற்றாண்டில், மிகச்சிறந்த உலோகக்கலவைகள் தமிழ்நாட்டின் சேர சாம்ராஜ்ஜியத்தில் இருந்து உலகெங்கிலும் பரவியதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: பெட்டர் இந்தியா
�,