�
6 அத்தியாயம் திரைப்படம் பார்த்து நான் மிரண்டு போனேன். இது வித்தியாசமான அணுகுமுறை என்று இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.
இப்படத்தை சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு படக்குழுவினர் திரையிட்டுக் காட்டினர். படத்தை பார்த்த பிறகு பாரதி ராஜா,“எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம். பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, பாராட்டத் தோன்றியது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “சமீபத்தில் வந்த நம் தமிழ்ப்படங்களில் பல நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த ‘6 அத்தியாயம்’ படம் பார்த்து நான் உண்மையிலேயே மிரண்டுதான் போனேன். தமிழ்சினிமாவிற்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. ஆறு அத்தியாயங்களுக்கும் நம்மை கட்டிப்போட்டு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து 6-வது அத்தியாயம் முடிவில் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள். இது மிகச்சிறந்த யோசனை. குறும்படத்திலேயே இவ்வளவு கெட்டிக்காரத்தனம் காட்டினால், அதை ஒரு முழுநீள திரைப்படத்திலும் நிச்சயம் கொண்டுவரமுடியும். உலகளவில் நம் படங்களை கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது” என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.�,