`உயிர்ச் சங்கிலியை அறுத்த மனிதர்கள்

Published On:

| By Balaji

சூழலியல் செயற்பாட்டாளர் த.முருகவேள் நேர்காணல்

சந்திப்பு: நரேஷ்

எல்லா அரசியல் கட்சிகளுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதாகவே திரும்பத் திரும்பக் கூறிவருகின்றன. தற்போதைய அரசும் அதையே சொல்கிறது. அதேநேரம் முந்தைய அரசுகளிலிருந்து மாறுபட்டு, வளர்ச்சிக்குப் புதியதொரு வழிமுறையை இந்த அரசு கண்டறிந்துள்ளது! “

இந்த வாசகங்கள்தான் அவரை வாசிக்கத் தூண்டின.

“இது எப்படிப்பட்ட மாற்றம் என்பதையும், இது எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்துகொள்ள ஒருவர் நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியே போனால் நமது மகன்களும் மகள்களும் காடுகளையும், அங்கிருக்கும் அரிய தாவரங்களையும், பறவைகளையும், உயிரினங்களையும் ஒளிப்படங்களிலும் அருங்காட்சியகங்களிலும் மட்டுமே பார்க்கக்கூடிய நிலை வெகு தொலைவில் இல்லை. ”

என்ற அக்கறை அவரைச் சந்திக்கத் தூண்டியது.

காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராகத் தனது சூழலியல் பயனத்தை ஆரம்பித்து, ஓவியராகி, எழுத்தாளராகி தற்போது சூழலியல் செயல்பாட்டாளராக மாறியிருக்கிறார் பேராசிரியர் த.முருகவேள். *இந்து தமிழ் திசை* நாளிதழிலும், *காடு*, *உயிர்* போன்ற சூழலியலுக்கான இதழ்களிலும் இயற்கையியல் சார்ந்த தீவிரமான கட்டுரைகளை எழுதிவருகிறார். பொத்தாம் பொதுவாகத் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், வணிக சுரண்டலுக்கு எதிராக மிக நுணுக்கமான தகவல்களைக் கொண்டு எழுதுவது இவரது சிறப்பு.

தனியார் கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றிக்கொண்டே, சூழலியல் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவருகிறார். கல்லூரிகளில் மாணவர்களிடம் சூழலியல் சார்ந்த தலைப்புகளில் விவாதம் நடத்தி சூழல் சார்ந்த விதைகளை அவர்களிடத்தில் விதைத்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே பாம்புகளைப் பிடித்து விளையாடியவர், இன்று பல்வேறு பாம்புகளை மீட்டிருக்கிறார். நகரத்தில் வாழும் உயிர்கள் குறித்து அதிக அக்கறை கொண்டவர். இந்த ஆர்வத்திற்கென்று ஒரு வரலாறும் இருக்கிறது.

சமீபத்தில் இவரது ’வான்வெளியின் புலிகள்’ புத்தகம் வெளியாகியிருந்தது. அந்த புத்தகத்தில் இருக்கும் அனைத்து ஓவியங்களை வரைந்திருப்பவரும் அவரே. அவை ஓவியமாக அல்லாமல், புகைப்படங்களாகவே புலப்பட்டன.

ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்தேன். பேச்சிலேயே தெரிந்தது, பக்கா மெட்ராஸ்காரர் என்று. பேசிய பிறகு தெரிந்தது, பக்கா மெட்ராஸ் காதலர் என்று. அவருடனான உரையாடலிலிருந்து…

**பேராசிரியர், ஓவியர், புகைப்படக்காரர்… அப்படியே வாழ்ந்திருக்கலாமே.. எங்கே தொடங்கியது இந்த இயற்கை மீதான காதல்?**

நான் ஒரு ‘Accident prone kid’ என்று என் பெற்றோர்கள் நினைத்தார்கள். வெளியே சென்றால் அடிபட்டுவிடும் என்று வீட்டுக்குள்ளேயே வளர்த்தார்கள். அதன்படியே நானும் அதிகம் அடிபட்டுக்கொள்வேன். அப்போது அறை முழுவதும் புத்தகங்கள் இருக்கும். எங்க தாத்தா அவ்வளவு புத்தகங்கள் வெச்சிருந்தார். அப்போ ஆரம்பிச்சது வாசிப்பு, வாசிப்பு ஆரம்பிச்சதுனாவே வாழ்க்கை ஆரம்பிச்சிருச்சுன்னுதான அர்த்தம்! அப்போ சூழலியல் பக்கம் ஆர்வம் போச்சு.

**ஏன் சூழலியல் பக்கம்? அதுக்கு ஒரு காரணம் இருக்கணுமே?**

அது இப்போ நினைச்சாலும் பசுமையான நினைவு. இப்போ இருக்க மாதிரி அப்பார்ட்மெண்ட்கள் எல்லாம் அப்போ இல்ல. நாங்க இருந்த இடம் அயனாவரம். சென்னையிலயே இருந்தாலும், அந்த இடம் அப்போ பசுமையா இருந்துச்சு. அப்போ எங்க வீட்டுலையே அஞ்சு மாடு, ரெண்டு நாய், கோழிகள்னு ஒரு சின்ன பண்ணை வீடாத்தான் இருந்துச்சு. இப்போ இருக்க சென்னையில நீங்க அப்படி ஒரு சூழல கற்பனைகூடப் பண்ணிப் பார்க்க முடியாது. நான் சொல்லுறது எண்பதுகள்ல நடந்த விஷயம். எங்க வீட்ட சுத்தி பலா மரம், சப்போர்ட்டா மரம், மாமரம்னு அவ்வளவு அழகா இருந்துச்சு. அப்படியொரு இடத்துல வளர்ந்துட்டு இப்போ இந்த இடம்லாம் பாக்கும்போது, இந்தப் புது தலைமுறை என்ன கத்துக்கப்போறாங்கன்னு இருக்கு. அவங்களுக்கு இயற்கையைப் பத்தி என்ன தெரியப்போகுது? நாம அவங்களுக்கு என்ன சொல்லித்தரப் போறோம்?

ஒரு நிலத்துல எத்தனை ஆயிரம் வகையான உயிரினங்கள் இருக்கணும்? ஆனா இவ்ளோ பெரிய நகர நிலத்துல இப்போ மனித இனம் மட்டும்தான் அதிகமா இருக்கு. மத்த உயிர்கள்லாம் எங்க போச்சு? நாமதான கொன்னோம்?

**கொலை செய்தோமா?**

ஆமா. இதெல்லாம் தெரியாதுன்னு மட்டும் சொல்லி தப்பிக்காதீங்க. எந்த உயிரினத்த பாத்தாலும் அதை கொன்னுட்டோ துரத்திட்டோதான் அடுத்த வேலைய பாக்குறோம். ஒரு கரப்பான்பூச்சியப் பாத்தாக்கூட கையில ஒரு விஷ பாட்டில தூக்குறீங்க. கரப்பான்பூச்சிகளை சாப்பிடுற உயிரினங்கள் எங்க போச்சு? ஒரு தட்டான், தவளையைக்கூடப் பாக்க முடியலையே.. இங்க உயிர் சங்கிலியே அறுக்கப்பட்டிருக்கு. அதனால தினம் தினம் கொலைகள் நடக்குது.

** நகரமயமான, தொழிற்புரட்சியின் உச்ச காலக்கட்டத்துல நகர கட்டமைப்புக்குள்ள பிற உயிரினங்களும் சேர்ந்து வாழ்வது சாத்தியமா?**

அன்னைக்கு இங்க ஒரு சதுர கிலோமீட்டருக்கு 5 பேர்னா, இப்போ 50 பேர். ஆனா இப்படி இருக்க சூழல்லகூட மத்த உயிரினங்களோட இயைஞ்சு வாழ்வது நிச்சயம் சாத்தியம். அது எப்படினு புரிஞ்சுக்கிட்டா போதும்.

**எப்படி?**

(தொடர்ந்து பார்ப்போம். நாளை…)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share