இந்தியப் பொருளாதாரமானது தற்போதுள்ள ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7 லட்சம் கோடியாக உயரும் என்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி பேசியுள்ளார்.
மும்பையில் அக்டோபர் 29ஆம் தேதி நடந்த ‘எகனாமிக் டைம்ஸ் கார்பரேட் எக்சலன்ஸ் அவார்டு’ நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானிக்கு 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த தொழில் தலைவர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசுகையில், “சில வருடங்களுக்கு முன்பெல்லாம் வெளிநாடுகளில் நாம் முதலீடு செய்வதே வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் இப்போது உள்நாட்டில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டோம். எங்களது ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இந்தியாவில் ஜியோ சேவைக்காக ரூ.3.5 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. அதற்குச் சரியான பலனும் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் தற்போதுள்ள ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7 லட்சம் கோடியாக உயரும்” என்று பேசினார்.
ஜியோவால் வருவாய் இழப்பைச் சந்தித்துவரும் ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி சுனில் சூட் மற்றும் ஐடியா நிறுவனத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த ஆண்டில் சிறந்த தொழில் தலைவருக்கான விருதை வென்றுள்ள முகேஷ் அம்பானி இதற்கு முன்னர் 2006ஆம் ஆண்டில் இதே விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,