உதயநிதி கோட்டா: பொன்முடி மகனுக்கு கள்ளக்குறிச்சியா?

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது அறிவிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக இன்று முதல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது முடிவு செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் திமுகவுக்கும் ஐஜேகேவுக்கும் இடையே தொகுதி பற்றிய குழப்பங்கள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. கடந்த மார்ச் 4ஆம் தேதி, மாலை ஐஜேகே தலைவரும், பாரிவேந்தரின் மகனுமான ரவி அறிவாலயத்துக்கு சென்று திமுக கூட்டணியில் ஐஜேகே கட்சிக்கு ஒரு தொகுதி என்ற உடன்படிக்கையில் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டார். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ரவி, “எங்களுக்கு விருப்பமான தொகுதி கள்ளக்குறிச்சிதான் அதைக் கேட்டிருக்கிறோம்., விரைவில் பேசி முடிவு செய்வோம்” என்று சொல்லியிருக்கிறார்.

இது முன்னாள் அமைச்சர் பொன்முடி வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி இம்முறை தனது மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்த சில மாதங்களாகவே தீவிர முயற்சி எடுத்து வந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஒன்றிய செயலாளர்களை தனிப்பட்ட முறையில் பார்த்து தன் மகனுக்கு ஆதரவு திரட்டி வந்தார்.

அதேநேரம் பொன்முடி மகனுக்கு கள்ளக்குறிச்சி சீட் கிடைத்து எம்.பி. ஆகிவிட்டால் பொன்முடியின் அதிகாரம் மீண்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவிவிடும் என்றும் திமுகவிலேயே சிலர் நினைத்தனர். இதனால் கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன் நிற்பதைத் தடுக்கும் விதமாக காய் நகர்த்தி வந்தனர். இந்நிலையில் ஐஜேகே கட்சி திமுக கூட்டணிக்கு வந்து சேர, அது பொன்முடி எதிர்ப்பாளர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது.

இந்த நிலையில்தான் மார்ச் 5 ஆம் தேதி விழுப்புரம் மத்திய மாவட்டத்தின் அதாவது பொன்முடி நிர்வாகத்துக்கு உட்பட்ட மாவட்டத்தின் ஒன்றியம்,நகரம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியே போன் செய்திருக்கிறார். ‘நாளைக்கு விருப்ப மனு கொடுக்க அறிவாலயம் போறேன். நீங்க கூட வரணும்’ என ஒவ்வொருவரிடமும் பேசியிருக்கிறார். பொன்முடியும் சிலரிடம் போனில் பேசி அழைத்திருக்கிறார்.

அதுவரை கள்ளக்குறிச்சி தொகுதி ஐஜேகே கட்சிக்கு என இருந்த நிலையில் பொன்முடி மகனின் இந்த நடவடிக்கையால் திமுகவில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. மறுநாள் மார்ச் 6 ஆம் தேதி சில நூறு பேரோடு தன் வெயிட்டைக் காட்டி விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கௌதம சிகாமணி.

அதுமட்டுமல்ல தன் மகனுக்கு கள்ளக்குறிச்சி சீட் வாங்குவதற்கான முயற்சிகளிலும் இறங்கிவிட்டார் பொன்முடி. இதுபற்றி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பொன்முடி ஆதரவாளர்களிடம் பேசினோம்.

“அண்ணன் ரொம்ப நாளாகவே தன் மகனுக்கு கள்ளக்குறிச்சியை கேட்டுக்கிட்டிருந்தார். ஆனா தலைவர் ஒரு கட்டத்துல பல வாரிசுகளுக்கு கொடுக்க வேணாம்னு மறுத்துட்டதா தகவல் வெளியானது. அதனால கொஞ்சம் அப்செட்டாதான் இருந்தார்.

பொன்முடி அண்ணன் குடும்பத்துக்கும், தலைவர் குடும்பத்துக்கும் நல்ல நெருக்கம் உண்டு. பொன்முடியின் மனைவியும் துர்கா ஸ்டாலினும் நல்ல தோழிகள். அதுபோல கௌதம சிகாமணியை வச்சி ரொம்ப வருடங்கள் முன்பே தளபதி பேரவை ஆரம்பிக்கப்பட்டது. அப்புறம் அது தலைமை உத்தரவால பெரிசா செயல்படாம இருந்துச்சு.

அதேநேரம் பொன்முடியின் மகன்களாக கௌதம சிகாமணி, அசோக் சிகாமணி ரெண்டு பேரும் உதயநிதியோடயும், அன்பில் மகேசுடனும் நல்ல நெருக்கத்துல இருக்காங்க. அண்மையில அசோக் சிகாமணியோட சென்னை மருத்துவமனையில ஒரு சிறப்புப் பிரிவை உதயநிதிதான் தொடங்கிவச்சார். அந்த அளவுக்கு இரண்டு பேர் குடும்பமும் நெருக்கமா இருக்காங்க.

தன் மகனுக்கு கள்ளக்குறிச்சி கிடைக்கறதப் பத்தி தலைவர் ஸ்டாலின் உறுதியா எதுவும் சொல்லாததால, பொன்முடி அடுத்த கட்டத்துல இறங்கினார். தான் ஏற்கனவே உயர் கல்வித் துறை அமைச்சரா இருந்தவர் என்ற அடிப்படையில எஸ்.ஆர்.எம். பாரிவேந்தர் யார் மூலமா சொன்னால் கேட்பார்னு கணக்கு போட்டு சில பேரைப் பிடிச்சு, ‘கள்ளக்குறிச்சியை விட்டுருங்க’ என கோரிக்கை வைத்தார்.

அதேநேரம் கௌதம சிகாமணி நேரடியாக உதயநிதி ஸ்டாலினை சந்திச்சு தனக்கு கள்ளக்குறிச்சியை எப்படியாவது வாங்கித் தரணும்னு கேட்டாரு. பொன்முடியின் மனைவி இது தொடர்பா துர்கா ஸ்டாலினையும் பார்த்துப் பேசியிருக்காங்க.

கிச்சன் கேபினட் முடிவின்படி இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை உள்ளிட்ட விஷயங்கள்ல வேலை செஞ்ச உதயநிதிக்கு ஒரு சீட் ஒதுக்க வேணும்னு தலைவரிடம் கோரிக்கை வச்சிருக்காங்க குடும்பத்துலேர்ந்தே. அதனால, கள்ளக்குறிச்சி உதயநிதி கோட்டாவின் அடிப்படையில் கௌதம சிகாமணிக்கு கிடைக்கலாம்னு சொல்றாங்க” என்று மகிழ்ச்சியாக சொன்னார்கள்.

இந்தத் தகவல் கிடைத்ததும் பாரிவேந்தர் தரப்பு அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருக்கிறது. இதுபற்றி ஐஜேகே வட்டாரங்களில் பேசினோம்.

“கள்ளக்குறிச்சி தொகுதியில பொன்முடி ஆதரவாளர்கள் கௌதம சிகாமணிக்காக வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்கனு எங்க கட்சித் தலைமைக்கு போட்டோவோட நியூஸ் வந்திருக்கு. அதனால, வேந்தர் குழப்பத்துல இருக்காரு. ஏற்கனவே பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ரெண்டு தொகுதியிலயும் நாங்க விரிவா ஆய்வு நடத்திதான் கள்ளக்குறிச்சி எங்களுக்கு சாதகமா இருக்குனு முடிவு பண்ணி அதைக் கேட்டோம். இப்ப திடீர்னு குழப்பமாகியிருக்கு. பொன்முடி தரப்புல சில பேர் பேசினாங்க. நீங்களா பெரம்பலூர் போயிட்டீங்கன்னா திமுகவுல பொன்முடி மகனுக்கு சீட் கிடைச்சுடும்னு சொன்னாங்க. இதப் பத்தி ஸ்டாலின்கிட்ட பாரிவேந்தர் பேசுவார்” என முடித்துக் கொண்டனர்.

கள்ளக்குறிச்சி பாரிவேந்தருக்கா, பொன்முடி மகனுக்கா என்ற கேள்வி இத்தொகுதி திமுகவினருக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share