உதயசூரியன் நிக்குது; திமுககாரர் நிக்கிறாரா?- நேர்காணல் சுவாரஸ்யங்கள்

Published On:

| By Balaji

திமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று (மார்ச் 10) நடந்தது. விருப்ப மனு கொடுத்த சுமார் ஆயிரம் பேர், அவர்களுக்கான ஆதரவாளர்கள் எனத் திரண்டதால் அறிவாலயமே திருவிழாக் கோலமாகக் காணப்பட்டது.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது. ஆனாலும் எந்த 20 தொகுதிகள் என்று உறுதியாகத் தெரியாததால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளுக்குக்கூட திமுகவினர் நேர்காணலில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார்கள்.

கலைஞர் இருக்கும்போது, ‘தொகுதி கிடைக்குதோ இல்லையோ… என் தலைவனை நேருக்கு நேரா உக்காந்து சில நிமிடங்கள் பாத்துட்டுப் போறதுக்காகவே பணம் கட்டுவோம்’ என்று பலரும் சொல்லுவார்கள். இப்போது கலைஞர் இல்லாத நிலையில் புதிய தலைவர் ஸ்டாலினைப் பார்ப்பதற்காகவும் அதுபோல ஒரு கூட்டம் வருகிறது என்பது உண்மை. ஸ்டாலின் ஏற்கனவே நேர்காணல்கள் பல நடத்தியிருந்தாலும் தலைவர் ஆனபின் நடத்தும் முதல் நேர்காணல் என்பதால் பலரும் ஆர்வமாகத்தான் வந்திருந்தார்கள்.

உள்ளே சென்று அமர்ந்ததுமே அவரவர் கொடுத்த விருப்ப மனுக்களை வைத்துச் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. என்ன மதம், என்ன சாதி என்ற போன்ற வழக்கமான கேள்விகளை அடுத்து, முக்கியமான கேள்வி, ‘எவ்வளவு செலவு செய்வீங்க?’ என்பதுதான். இதற்கு விருப்பமனு கொடுத்த பெரும்பாலானோர் சொன்ன பதில் ஒரு கோடி, இரண்டு கோடி என்பதாகத்தான் இருந்திருக்கிறது. 5 கோடி செலவு செய்வதாகச் சொன்னவர்கள் சொற்பமாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

முக்கியப் பிரமுகர்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் போன்றவர்களிடம் இந்தக் கேள்வி வைக்கப்பட்டபோது, ‘எட்டு கோடி வரைக்கும் செலவு செய்யத் தயார்’ என்று சொல்லியிருக்கிறார்களாம் அவர்கள். இது திமுக தலைமையை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட சிலர், ‘ஜெயிக்குற அளவுக்கு செலவு செய்வோம்’ என்று வித்தியாசமான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள்.

இது தவிர கூட்டணிக் கட்சிகளுக்கு என்று அரசல் புரசலாகத் தெரிந்து அங்கே போய் அதை உறுதிப்படுத்துகிற நிகழ்வுகளும் நடந்தன. நாமக்கல் மக்களவைத் தொகுதி கொமதேக ஈஸ்வரனுக்கு என்று பேச்சுவாக்கில் . ஊடகங்களில் தெரிந்தாலும், சும்மா இருக்கக் கூடாது என்று பலரும் விருப்ப மனு போட்டிருந்தனர்.

ஒரு தொகுதி கூட்டணிக் கட்சிக்குப் போகிறது என்பதை எப்படி உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்றால் அந்தத் தொகுதிக்கு மட்டும் விருப்ப மனு கொடுத்த அனைவரையும் ஒன்றாகவே உள்ளே அழைப்பார்கள். அதுபோல நாமக்கல் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்த அனைவரையும் நேற்று ஒருசேர உள்ளே அழைத்தனர்.

அவர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்களே?’ என்றார்.

ஒரு நிர்வாகி, ‘போனவாரமே தெரியுமுங்க’ என்றார். இன்னொருத்தரோ, ‘அவங்க போன வாரமே வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க தலைவரே’ என்றார்.

உடனே ஸ்டாலின், ‘அப்படின்னா நீங்களும் சேர்ந்து செய்ய வேண்டியதுதானே?’ என்று சிரித்தார்.

’நம்ம தொகுதியில உதயசூரியன்தான் நிக்குது நீங்க ஜெயிக்க வைக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார். துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் அமைதியாக இருக்க நாமக்கல் திமுகவினர் சோர்வாக ஐந்தே நிமிடங்களில் வெளியேறினார்கள்.

பெரம்பலூர் தொகுதிக்கும் இதேபோலத்தான் நடந்திருக்கிறது. பெரம்பலூர் தொகுதிக்குப் பணம் கட்டியவர்களை ஒரே நேரத்தில் அழைத்தபோதே அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. ‘சரி… கள்ளக்குறிச்சிக்கு பதிலாக ஐஜேகேவைப் பெரம்பலூருக்குத் தள்ளிவிட்டார்கள் போல’ என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றனர்.

அதேபோல ஸ்டாலின், ‘பெரம்பலூர்ல கூட்டணிக் கட்சி நிக்குது. உதயசூரியன்லதான் நிக்குது. அதனால எல்லாரும் நாமளே நிக்கிறது போல வேலை பார்க்கணும்’ என்று சொல்லியிருக்கிறார்.

அப்போது விருப்ப மனு கொடுத்த ஒருவர், ‘தலைவரே… அய்யாக்கண்ணுவோட போய் டெல்லி வரைக்கும் விவசாயிகள் போராட்டம் நடத்தினவங்கள்ல நம்ம தொகுதிக்காரங்கள் நிறைய இருக்காங்க. நானும் போனேன். இதோ போட்டோக்களைப் பாருங்க’ என்றபடியே டெல்லி விவசாயப் போராட்டப் படங்களை எடுத்து ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு எல்லாரிடமும் கொடுத்தார்.

‘சரி… சரி…’ என்றார் ஸ்டாலின்.

உடனே அந்த நிர்வாகி, ‘திமுக காரனுக்கு கொடுப்பீங்கனு நினைச்சோம்’ என்று சொல்ல, உடனே ஸ்டாலின், ‘உதயசூரியன்தானங்க நிக்குது’ என்றார்.

உடனே மீண்டும் அந்த நிர்வாகி, ‘உதயசூரியன் நிக்குதுங்க. திமுககாரன் நிக்குறானா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அதற்கு ஸ்டாலின் பதிலேதும் சொல்லாமல், ‘போயிட்டு வாங்க நல்லா வேலை பார்த்து ஜெயிக்க வையுங்க’ என்று சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டார்.

கூட்டணிக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேரங்கள் உள்ளபடியே திமுக தலைவருக்கு தர்ம சங்கடமான நேரங்கள்தான்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share