உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் செக்ஸ் செயல்பாடு!

Published On:

| By Balaji

கெவின் சி.ஜோர்ன்

வயது, சமூக அந்தஸ்து, பாலியல் விருப்பம் என்று எல்லாவற்றையும் தாண்டி ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது செக்ஸ் நலம். வாழ்வின் தரத்தை நிர்ணயிப்பதில், ஜோடிகளுக்கு இடையிலான பிணைப்பை அதிகரிப்பதில் இதுவே அடிப்படை. எனவே, செக்ஸ் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்போது, ஒருவரது செக்ஸ் நலம் பாதிக்கப்படும்போது, உடனடியாக மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

செக்ஸ் குறைபாடு என்பது பொதுவாக செக்ஸ் உறவில் ஏற்படும் அதிருப்தியாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்ப இதன் வரையறைகள் மாறுகின்றன. உண்மையில், செக்ஸ் குறைபாடு என்பது வாழ்வின் தரத்தைப் பாதிக்கிறது. முக்கியமாக, ஏதேனும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

**ஒட்டுமொத்த உடல் சார்ந்தது**

ஒருவரது செக்ஸ் செயல்பாடு என்பது குறிப்பிட்ட உறுப்புகள் சார்ந்ததல்ல; ஒட்டுமொத்த உடலையும் சார்ந்தது. ஹார்மோன்களும் நரம்புப் பாதைகளும் ஒன்றிணைந்து இருப்பது செக்ஸ் ஆசை தூண்டப்படுவதன் பின்னணியில் உள்ளது. இந்த ரத்த உந்துதலுடன் ஆணுறுப்பு செயல்பாடுகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஓர் ஆணுக்கு விரைப்புத்தன்மை ஏற்படும். தசைகளும் நரம்புகளும் ஒன்றாகச் செயல்படும்போதுதான் விந்து வெளிப்படுதல் நிகழும். இவை எல்லாம் ஒழுங்காக நடந்தாலே ஓர் ஆண் உச்சக்கட்டம் என்பதை உணர இயலும்.

செக்ஸில் ஆர்வமின்மை மற்றும் ஆண்மையின்மை, விரைப்புத்தன்மை, விந்து வெளியேற்றுதலில் பிரச்சினை, உச்சக்கட்டம் அடைதலில் பாதிப்பு போன்றவை பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் செக்ஸ் குறைபாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. உடல் சார்ந்த குறைபாடுகள், நோய்களால்கூட இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

செக்ஸ் குறைபாட்டை அறிய முற்படும்போது, ஒரு நோயாளியின் உடல், மனம், செக்ஸ் குறித்த கடந்த கால வரலாற்றைத் தெரிந்துகொள்வது முதல் படியாகும். இதன் பிறகு, செக்ஸ் குறைபாட்டுக்கான காரணம் ஆராயப்படும். இதற்குப் பல காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளதால், இது பற்றி இணையிடம் கேட்கும்போது இன்னும் பல தகவல்கள் தெரியவரும். எனவே, மருத்துவரின் சோதனைகளுக்கோ, கேள்விகளுக்கோ தயக்கமில்லாமல் பதில் சொல்ல வேண்டும்.

**ஆண்மை பிரச்சினை**

குறைவான செக்ஸ் ஆசை அல்லது ஆசையற்று இருப்பது பெரிய அளவில் இணைகளுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட நோயாளியின் செக்ஸ் திருப்தி குறித்து அறிய வேண்டியதும் இதில் முக்கியமானது. சில ஆண்களுக்கு மிகவும் திருப்திகரமாகத் தோன்றுவது, சிலருக்குப் போதுமானதாக இருக்காது. இந்த வேறுபாட்டை அறிவது அவசியம். ஆண்களில் குறைவான சதவிகிதம் பேரே இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது ஹார்மோன், மூளைச் செயல்பாடு ஆகியவை சார்ந்த பிரச்சினை.

ரத்தத்தில் டெஸ்டோஸ்டீரான் சரியான அளவில் இருப்பதும், இணையின் மீதான ஈர்ப்பும் மட்டுமே செக்ஸ் ஆசையை நிர்ணயிக்கும். விரைப்புத்தன்மை சார்ந்தே ஆண்மை பிரச்சினை உணரப்படுகிறது. இரவு நேரச் சூழல், முந்தைய செக்ஸ் செயல்பாடுகள், மனம் சார்ந்த கோளாறுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இதற்குச் சிகிச்சை அளிக்கப்படும்.

**நோய் பாதிப்பும் செக்ஸ் ஆர்வமும்**

மதுவினால் பாதிப்பு, மன அழுத்தம் போன்றவற்றினால் செக்ஸ் ஆர்வம் பாதிக்கப்படும் என்பது அனைவருமே அறிந்ததுதான். ஆன்டி ஆண்ட்ரோஜன்கள், 5-ஆல்பா குறைப்புத் தடுப்பான்கள், ஒபியாயிட் வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதும்கூட செக்ஸ் நலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சோர்வைப் போக்கிப் புத்துணர்வை அளிக்கும் மருந்துகளாலும் இந்த பாதிப்பு ஏற்படும். இது தவிர, ஹார்மோன் கோளாறுகளுக்கான மருந்துகளும் படுக்கையறையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். வாதம், முதுகெலும்பில் காயம், டிமென்ஷியா, தொடையிடுக்கில் வலி, புரோஸ்டேட் அறுவை சிகிச்சை, பிஸ்டுலா, ஹைபர் தைராய்டிசம், ஹைபோ தைராய்டிசம், தோல் நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றினால் செக்ஸ் உறவில் பாதிப்பு ஏற்படும்.

உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, உடல் பருமன், மன அழுத்தம் உட்படப் பலவற்றினால் செக்ஸ் ஆர்வம் வீழ்ச்சியடையும். அதிகமாக சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றினால்கூட ஆணுறுப்பு நரம்புகள், திசுக்கள் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

**குணப்படுத்துவது எப்படி?**

செக்ஸ் நலம் பாதிக்கப்படும்போது, சம்பந்தப்பட்டவருக்கு மருந்துகளைப் பரிந்துரைப்பதைவிட, சில பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவது மருத்துவர்கள் மத்தியில் பரவலாகிவருகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள்தான் விரைப்புத்தன்மை இன்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வாக இருக்கும். முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், புகைப்பதை நிறுத்துவது, மது உட்கொள்வதைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்வது போன்றவற்றினால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

வயாகரா, லெவித்ரா, சியாலிஸ் போன்ற சில மருந்துகளும்கூட நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றால் முதுகுவலி, தசைவலி, பார்வைக் குறைபாடுகள் போன்ற பக்க விளைவுகள் அதிகம் ஏற்படும் அபாயமும் உள்ளது. வெளிப்புறமாகப் பயன்படுத்தும் மருந்துகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றின் மூலமாகவும் இந்த பாதிப்பு சரி செய்யப்படுகிறது.

**பெண்களின் அதிருப்தி**

சமூகக் கட்டமைப்பு மற்றும் வெட்கப்படும் இயல்பு பெண்களைத் தங்களது செக்ஸ் குறைபாடுகளை வெளிப்படையாகத் தெரிவிக்கவிடாமல் தடுக்கின்றன. செக்ஸ் ஆர்வம் தூண்டப்பட்டு, உடலுறுப்புகள் அதற்கான அறிகுறியை வெளிக்காட்டி, உற்சாகமாக அதில் திளைத்து, இறுதியில் உச்சக்கட்டம் அடைவது நிகழும். இந்தச் சுழற்சியில் சிறிது பிசகினாலும் பெண்களின் செக்ஸ் திருப்தி முழுமையடையாது. இது தவிர சில உடல், மனப் பிரச்சினைகளும் பெண்களின் செக்ஸ் ஆர்வத்தைப் பாதிக்கின்றன.

சர்க்கரை குறைபாடு, இதய நோய்கள், நரம்புக் குறைபாடுகள், ஹார்மோன் சமச்சீர் இன்மை, மெனோபாஸ் பருவம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் குறைபாடு, மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டின் விளைவுகள் உட்படப் பல பிரச்சினைகள் செக்ஸ் ஆர்வத்திலும் செயல்பாட்டிலும் இடையூறை ஏற்படுத்துகின்றன.

நன்றி: [மெடிசின் நெட்](https://www.medicinenet.com/sexual_sex_problems_in_men/article.htm#what_are_sexual_problems_in_me)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share