டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்
**மனதை ஆராய்ந்து, வாழ்வை அலசும் சிறப்புத் தொடர்**
உடலுக்கும் மனதுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. அதனால்தான் சிறிய அளவில் காய்ச்சல், தலைவலி என்றால் கூட, மனசு ஏதும் சரியில்லையா என்று கேட்பதை நமது முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். நோயின் வாட்டம் உடலில் தென்படாதபோது, கண்டிப்பாக மனப்பிரச்சினைகளே இதற்குக் காரணம் என்பது அடிப்படை.
சில நேரங்களில் நம் உடலில் ஏற்படும் சில பிரச்சினைகளுக்கு, என்ன தீர்வென்று கண்டுபிடிக்கவே இயலாது. உடலை அக்கு வேறாக ஆணி வேறாகச் சோதனையிட்டுப் பார்த்தாலும், கோளாறுக்கான மருத்துவக் காரணங்கள் எதையும் கண்டறிய முடியாது. அந்த மாதிரியான நேரங்களில், மனநல ஆலோசனைகளை முயற்சிப்பது சரியான தீர்வுகளைத் தரலாம். இன்று, பல உடலியல் மருத்துவர்கள் சில நோய்களுக்குத் தீர்வாக மனநல சிகிச்சைகளையே பரிந்துரைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நோயாளிகளில் பலர், உடல் பிரச்சினைக்கு எதற்கு மனநல ஆலோசனை என்று குழம்பிப் போகின்றனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கெல்லாம் மனநல சிகிச்சை மையத்தை நாட வேண்டுமா? நாம் சாதாரண மனநிலையில் தானே இருக்கிறோம். எதற்காக, அதனைச் சோதிக்க வேண்டும் என்று கேள்விகள் தொடர்கின்றன.
மைண்ட் ஸோன் மருத்துவமனை காத்திருப்பு அறையில் இருந்த சாந்தியும், அப்படிப்பட்ட கேள்விகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடன், அவரது கணவரும் வந்திருந்தார். வீட்டில் தங்களது இரு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு வந்ததாகத் தெரிவித்தார் சாந்தி. மனநல ஆலோசனை வழங்குவதற்கு முன்பாக, பொது அறிவு மற்றும் சுய விருப்பங்கள் சார்ந்த கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தபோதே, நான் மிகவும் சாதாரணமாக இருக்கிறேன் இல்லையா என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கேள்வியை, இதன் பின்னர் பல முறை அவர் கேட்டார் என்பது தனிக்கதை. இயற்கையை விரும்பும் இயல்புடையவரான சாந்தி, ஒரு சித்தா மருத்துவர். கவிதை எழுதுவார். கட்டுரைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். பன்முகத் தன்மை கொண்டவராக இருந்தார் சாந்தி. ஃபேஸ்புக்கில் அவருக்கென்று தனித்த நண்பர்கள் வட்டம் இருந்தது. ஓவியம் வரைவது, ட்ரெக்க்கிங் செல்வது, சுற்றுலா போவது, தோழிகள் மற்றும் உறவினர்களுடன் அளவளாவுவது என்று இவரது ஹாபிகளின் வரிசைப் பட்டியல் மிகவும் பெரியது.
**வெறுமையின் தாக்கம்**
இப்படிப்பட்ட சாந்தி, ஒருகட்டத்தில் தனது வாழ்க்கையில் வெறுமையை உணர்ந்தார். அந்தக் கணத்தில் இருந்து, அவரது வாழ்வு அடியோடு மாறிவிட்டது. திடீரென்று ரத்த வாந்தி எடுப்பதுதான் சாந்தியைத் தொற்றியிருந்த பிரச்சினை. அவரது மூக்கில் இருந்தும், வாயில் இருந்தும் ரத்தம் ஒழுகியது அல்லது அதற்கான வீடியோ சான்றுகளை சாந்தி அனைவரிடமும் கொடுத்திருந்தார்.
மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னர், அவர் ஏழு அல்லது எட்டு மருத்துவமனைகளுக்குச் சென்று பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டார். தனக்கு கேன்சரா அல்லது வேறு ஏதேனும் பெரிய வியாதியா என்று சந்தேகம் கொண்டிருந்தார் சாந்தி. அவரது குடும்பத்தினரும், அவரது ரத்த வாந்தியைக் கண்டு பயந்து போயிருந்தனர். எக்ஸ்ட்ரே, ஸ்கேன், எம்ஆர்ஐ, எண்டோஸ்கோபி என்று அத்தனை வகையறா சோதனைகளையும் செய்தாகிவிட்டது. எந்தச் சோதனை செய்தாலும், அவருக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென்றே தெரியவந்தது. இதனால், சோதித்த மருத்துவர்கள்தான் குழம்பிவிட்டனர்.
இதற்காகவே, ஏழு அல்லது எட்டு மருத்துவமனைகளில் சாந்தி சோதனை மேற்கொண்டிருந்தார். அவரே ஒரு மருத்துவர் என்பதால், இந்த முடிவுகளால் அவர் திருப்தி அடையவில்லை. எல்லா இடத்திலும் ஒரேவிதமான ரிசல்ட் தான். சாந்திக்கு எந்த நோயும் இல்லை என்பதே அது. ஆனால், எல்லா மருத்துவர்களிடமும் சொல்லிவைத்தாற்போல, தான் ரத்த வாந்தி எடுத்ததை செல்போனில் படம்பிடித்துக் காண்பித்திருந்தார் சாந்தி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதையே மைண்ட் ஸோன் பரிசோதனையிலும் தெரிவித்தார். இன்னொரு முறை அவருக்கு உடலியல் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை என்பது தெளிவானது. அதன் பின்னரே, அவரது மனநலம் பரிசோதிக்கப்பட்டது.
**காதலும் திருமணமும்**
சாந்தி, கல்லூரியில் தன்னுடன் படித்த செபாஸ்டியன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவர். செபாஸ்டியன் குடும்பமானது, தீவிரமான கிறிஸ்தவ மத வழக்கங்களைப் பின்பற்றி வந்தது. அவர்களால், சாந்தியைத் தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், செபாஸ்டியனின் விருப்பத்துக்கு அவர்கள் தடை சொல்ல விரும்பவில்லை. திருமணமான சில ஆண்டுகளுக்குப் பின்னர் நிலைமை மாறியது.
மெதுவாக, சாந்தியின் குணங்கள் அவர்களுக்குப் பிடித்துப்போனது. அதிகம் பேசாத, எல்லோரிடமும் புன்னகையுடன் உரையாடக் கூடிய, சுமுகமாகப் பழகக்கூடிய, எந்தவித மோசமான குணங்களும் இல்லாத பெண் சாந்தி. செபாஸ்டியன் குடும்பத்தைப் பொறுத்தவரை, இதுவே சாந்தியைப் பற்றிய எண்ணம்.
அந்த அளவுக்கு, செபாஸ்டியன் குடும்பத்தில் இருந்த அனைவரது தேவைகளையும் அறிந்து, அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்தார் சாந்தி. இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னர், அவரது வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகமானது. செபாஸ்டியன் அலுவலக வேலையில் மூழ்கிக் கிடக்க, எந்நேரமும் மருத்துவமனை, குழந்தைகள், குடும்பம் என்றிருந்தார் சாந்தி.
இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் கொண்டாட்டங்கள், பிறந்த நாள் விழாக்கள், குடும்பச் சுற்றுலா என்று இருந்து வந்தனர் செபாஸ்டியனும் சாந்தியும். ஆனாலும், இருவரும் மனம்விட்டுப் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாக உணர்ந்தார் சாந்தி. இதனைத் தனது கணவரிடமும் தெரிவித்தார். எவ்வளவோ முயன்றும், செபாஸ்டியனால் குடும்பத்துக்காக நேரம் செலவிட முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன்புதான், தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, அவர் தனியாகத் தொழில் தொடங்கியிருந்தார். இதனால், உறவினர்களும் நண்பர்களும் அந்தக் குடும்பத்தினர் மீது லேசாகப் பொறாமை கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு, அவர்களது ஒட்டுமொத்த முன்னேற்றமும் இருந்தது. சுற்றத்தினரின் பொறாமை, அவர்களுக்கும் தெரியும்.
இப்படியான சூழ்நிலையில்தான், சாந்தியை வாட்டத் தொடங்கியது ரத்த வாந்தி பிரச்சினை. சில ஆண்டுகளுக்கு முன்பு, பணிக்குச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார் சாந்தி. அப்போது, அவரது முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த முதுகெலும்பு பிரச்சினை சரியாகும் வரை, அவர் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. சுமார் ஐந்து மாத காலம் அவர் முழு ஓய்வில் இருந்தார்.
இந்தக் காலகட்டத்தில், அவரது குடும்பமே நிலை தடுமாறியது. குடும்பத்தையும் வேலையையும் சரிவர நிர்வகித்து வந்தவர் சாந்தி. ஓய்வுக்காலத்தில், அவரால் இரண்டையும் சரிவரக் கவனிக்க முடியவில்லை. பருவ வயதை எட்டும் பெண் குழந்தைகள், தாயோடு மனம்விட்டுப் பேசுவதைக் குறைத்தனர். செபாஸ்டியன் தனது தொழிலே கதி என்றிருந்தார். சாந்தியிடம் பேசக்கூட ஆளில்லை. அக்கம்பக்கத்தில் தேடிச்சென்று வழக்கம் இல்லாததால், அவர்களிடம் பேசவும் தயங்கினார் சாந்தி. அந்த நேரத்தில், செபாஸ்டியனின் பெற்றோர்களும் இதர உறவினர்களும் சில விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் காலகட்டத்தைக் கடந்துவந்தார் சாந்தி. அவரது முதுகுத் தண்டுவடப் பிரச்சினை சரியானது. ஆனால், அவர் முன்னர் இருந்ததுபோல இல்லையென்று உணர்ந்தனர் அவரது உறவினர்கள். காரணம், அவரது குணமே அடியோடு மாறியிருந்தது.
திடீரென்று வீட்டில் இருக்கும் பொருட்களைத் தூக்கி வீசத் தொடங்கினார் சாந்தி. மகள்கள் சாதாரணமாகப் பேசினாலும், அவர்களை அடித்தார். அவரது கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. செபாஸ்டியன் எத்தனையோ வழிகளைப் பின்பற்றினார். வீட்டுக்குச் சீக்கிரமாக வந்தார். குழந்தைகளுடன் நேரம் செலவழித்தார். சாந்தியை அவ்வப்போது வெளியே பொதுவிடங்களுக்கு அழைத்துச் சென்றார். அடிக்கடி ஹோட்டல்களுக்கு குடும்பமாகச் சென்று அனைவரும் சாப்பிட்டு வந்தனர். ஆனாலும், சாந்தியின் நிலைமையில் எந்த முன்னேற்றமில்லை.
**இனம் புரியாத பிரச்சினை**
இந்த நிலையில் தான், அவர் ரத்த வாந்தி எடுத்துத் தொலைத்தார். இருக்கிற பிரச்சினை போதாதென்று இது வேறா என்று தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார் செபாஸ்டியன். அவரது பெற்றோர் தான், இது அமானுஷ்யமான விஷயமாகவும் இருக்கலாம் என்று கூறினர். இதனைத் தீர்க்க, சில பாதிரியார்கள் வந்து விசேஷ ஜெபம் செய்தனர். சாந்தியின் உடலில் துர்சக்தி இருப்பதாகக் கூறினர்.
எத்தனை சடங்குகள் செய்தாலும், சாந்தியின் குறைபாடு சரியாகவில்லை. பில்லிசூனியத்தை வேரறுக்க, வேறு சில வழிகள் இருப்பதாகத் தெரிவித்தனர் அவர்களுக்கு நன்கு அறிமுகமான சிலர். செபாஸ்டியனோ, அவரது குடும்பத்தினரோ அவற்றைச் செயல்படுத்தத் தயாராக இல்லை. ஆனால், அந்த பயத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பத்தைத் தீர்க்கவும் வழியில்லை. இந்த நேரத்தில் தான், ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் சாந்தியை மனநல ஆலோசனைக்காக அழைத்து வந்திருந்தார் செபாஸ்டியன்.
தனக்கு பேய் மற்றும் பிசாசு போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்றார் சாந்தி. ஆனால், தனது குடும்பத்தினர் பில்லிசூனியம் போன்றவற்றில் தீவிர நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். மருத்துவச் சோதனையிலும் முடிவு கிடைக்கவில்லை; பில்லிசூனியத்தின் பக்கம் செல்லவும் விரும்பவில்லை. மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளவும் தனக்குச் சிறிதும் விருப்பமில்லை என்று கூறினார்.
கடந்த காலத்தில் ரத்த வாந்தி போன்ற வித்தியாசமான உடலியல் பிரச்சினைகள் இருந்ததா என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் சொன்ன பதில், இன்னும் விசித்திரமானது. தனக்கு ஈஎஸ்பி (Extra Sensory Perception) எனும் புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்ததாகத் தெரிவித்தார் சாந்தி. பேய், பிசாசு மீது நம்பிக்கையற்ற ஒருவர், தனது அதீத மனோசக்தியை மட்டும் அளவுக்கதிகமாக நம்பினார். இது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.
ஈஎஸ்பி இருந்ததனால், சாந்தியின் கடந்த கால வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கடந்த காலத்தில் சாந்திக்கு வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டனவா? இதிலிருந்து அவரால் மீண்டுவர முடிந்ததா?
(நாளை…)
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன*
**எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்**
கட்டுரையாளர்கள்:
**டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்**
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.
**டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்**
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில். பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”