ஓரு கப் காபி!
**முகேஷ் சுப்ரமணியம்**
அவசர அவசரமாக கணினியில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள், திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட நீங்கள் பார்த்த வேலை ஒரே நொடியில் மாயமாகிப் போனால் எப்படியிருக்கும்? அடடா, யுபிஎஸ் பேட்டரி மட்டுமிருந்திருந்தால் கால அவகாசம் கிடைத்திருக்குமே என தோன்றுமல்லவா?
அப்படி புறக்காரணிகளால் நம் சக்தி ஒரே நொடியில் துண்டிக்கப்படாமலிருக்க, நம் உடலுக்கும் மனதிற்கும் யுபிஎஸ் பேட்டரி இருந்திருந்தால் எப்படியிருக்கும்? உண்மையில், நம்மிடம் அப்படியொரு பேட்டரி இருக்கிறது.
கடும் வெயில்; தலை சுற்றிக் குப்புற விழுகிறோம்; உடல் படுத்து விடுகிறது. ரத்தம் உள்ளங்காலிலிருந்து தலை வரை சீராகப் பாய்கிறது. சிறிய ஆசுவாசத்துக்குப் பின், உடல் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டு மீண்டும் எழுந்து செயல்படுவது இயற்கையின் கொடையல்லவா? உடல் படுத்தால் சரி, மனம் படுத்தால்?
மனதிற்கு எப்போதும் தப்பிக்க வழிகள் தெரியும். நாம் விழிப்புணர்வோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும். சில நேரங்களில் அதை அதன் போக்கில் விடுவதுதான் சரி. கடந்த காலத்தை எண்ணும்; நிகழ் காலத்தை அதுவாகவே ஊன்றி கவனிக்கும்; எதிர்காலத்தின் ஏதோ ஒரு தெருவுக்குள் வண்டியோட்டும். விசித்திரமான மருந்துதான் இயற்கை மனம். காலில் முள் எடுக்கும் போது ‘வானத்தை பாரு’ என நம் பாட்டிகள் சொல்வதைப் போலத்தான்.
ஒரு சூத்திரத்தில் புத்தர் சொன்ன நீதிக்கதை:
ஒருவன் ஒரு வயலைத் தாண்டி போய்க்கொண்டிருந்தபோது புலி ஒன்றை எதிர்கொண்டான். அவன் ஓட, புலி அவனைத் துரத்தியது. செங்குத்துப் பாறையில் ஏறியவன் அங்கு விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்த காட்டுக் கொடியின் வேரைப் பிடித்துக்கொண்டு இறங்கினான். துரத்திய புலி மேலே இருந்து மோப்பம் பிடித்தபடி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. நடுங்கியபடி அவன் இறங்கிவந்த சமயம் கீழே இன்னொரு புலி அவனை அடித்துச் சாப்பிடக் காத்துக்கொண்டிருந்தது. அந்தக் கொடி மட்டுந்தான் அவனை விழாமல் தாங்கிக்கொண்டிருந்தது.
வெள்ளை, கறுப்பு என இரண்டு சுண்டெலிகள் அந்தக் கொடியை கொஞ்சம் கொஞ்சமாக கடிக்க ஆரம்பித்தன. பக்கத்தில் சிவந்து பழுத்திருந்த இனிய ஸ்ட்ராபெர்ரி பழத்தை அவன் பார்த்தான். ஒருகையில் காட்டுக் கொடியைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அந்தப் பழத்தைப் பறித்தான். அடடா, எப்படி தித்தித்தது!
சமயத்தில் நாம் வாசித்த புத்தகங்கள், கேட்ட இசை, பார்த்த ஓவியம், நாடகம், சினிமா என கலையின் ஏதேனும் ஒரு அங்கம் கூட அந்த நேரத்திற்கான யுபிஎஸ் ஆக மாறி நம்மை இழந்துவிடாமல் காக்கக்கூடும். எனவே அன்றாடமும் நமது யுபிஎஸ்ஸை சார்ஜ் செய்து கொள்வோம். மின் வெட்டு எப்போது வருமென யாரறிவார்?
**
மேலும் படிக்க
**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**
**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**
**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**
�,”