உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் 100 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போருக்கு உலக அளவில் பல நாடுகள் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் ரஷ்யா போரை நிறுத்தாமல் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை குண்டு வீசி அழித்துள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி உதவிகள், ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்கிய அமெரிக்காவை ரஷ்ய நாடு கடுமையாக கண்டித்தது. இந்த நிலையில் வியன்னாவில் நடைபெற்ற ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா பங்கேற்றது. அங்கு ரஷ்ய தரப்பில் தூதுக்குழுவின் தலைவர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் வெளியிட்ட அறிக்கையில், “மேற்கத்திய நாடுகளுக்கு ஆயுத உதவிகளாக வழங்கி வரும் ஆயுதங்கள் கள்ளச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. மேலும் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்த ஆயுதங்கள் விற்கப்படுகின்றன. இதற்கு உரிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், “உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை அபாய கட்டத்துக்குத் தள்ளுகிறது. இந்தப் போருக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
“ரஷ்யா இன்னும் வலிமையாகவும் சக்திவாய்ந்ததாகவும் தங்களை நினைத்து செயல்பட்டு வருகிறது. போரை முடிவு கட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தாமல் வேறு ஏதேதோ விஷயங்களை பேசுவதிலேயே ரஷ்யா முனைப்பாக இருக்கிறது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
.