ஈரோட்டில் மதிமுக: திண்டுக்க‌ல்லை நோக்கி இளங்கோவன்

Published On:

| By Balaji

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், திமுக கூட்டணியில் யாருக்கு என்ன தொகுதி என்பது கிட்டத்தட்ட அறிவிக்கப்படும் நிலையில் இருக்கிறது

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மக்களவைத் தொகுதி காஞ்சிபுரம் என்றும் அங்கே அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா நிற்பார் என்றும் சில நாட்களாகவே பேச்சுகள் எழுந்தன. அதற்கேற்றாற் போல் காங்கிரஸிலும் காஞ்சிபுரம் வேண்டாம் என்றே சொல்லி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய நிலவரத்தின்படி மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதாக திமுக வட்டாரத்தில் தெரிவித்தனர். தொகுதியை ஸ்டாலின் அறிவிப்பார் என்று வைகோ தெரிவித்திருந்தார். இதன் மூலம் திமுக சின்னத்திலேயே மதிமுக நிற்பதும் தெரியவருகிறது. ஈரோட்டில் கணேசமூர்த்திக்காகவே மதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஈரோடு தொகுதி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் சில வாரங்களாகவே நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனை என்று தயாராக இருந்தார். ஆனால் தற்போது ஈரோட்டில் அவர் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் கோவையில் போட்டியிடலாமா என்று கூட சில முயற்சிகள் எடுத்தார்.கோவையில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டால் சரியாக இருக்குமென்றும் கருதினார். மேலும் தனக்கு அங்கே சில சாதகங்கள் இருக்கிறது என்பதால் கோவைக்கு ஆவலாக இருந்தார்.

ஆனால் திமுக கூட்டணியில் சிபிஐ க்கு நாகப்பட்டினம், கோவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பூர், மதுரை என்றும் முடிவாகிவிட்டதாக இளங்கோவனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் கோவையில் போட்டியிடும் எண்ணமும் அவருக்கு கை கூடவில்லை. இதனால் திண்டுக்கல் தொகுதியை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளார் இளங்கோவன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share