ஈரோடு: மதிமுக வேட்பாளராக அ.கணேசமூர்த்தி போட்டி!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் முன்னாள் எம்.பி கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு தொகுதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறிவைத்திருந்த நிலையில், அந்தத் தொகுதியை கணேசமூர்த்திக்காக கேட்டு திமுகவிடம் மதிமுக கடுமையாக அழுத்தம் கொடுத்துவந்தது. கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலை நேற்று வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற இருக்கின்ற 17 ஆவது பொதுத் தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

**வேட்பாளர் குறிப்பு**

மதிமுக பொருளாளரான கணேசமூர்த்தி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை அருகில் உள்ள கணபதிபாளையம் என்ற கிராமத்தில், அவினாசி கவுண்டர்-சாரதாம்பாள் ஆகியோரின் மகனாக 10.6.1947 இல் பிறந்தார் . பெருந்துறை அரசு உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடித்தபின்னர், சென்னை தியாகராயர் கல்லூரியில் பி.ஏ. (பொருளியல்)பட்டம் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியில் பி.ஜி.எல். படித்து, பி.எல். வகுப்பில் சேர்ந்தார்.

சென்னை மாவட்ட மாணவர் திமுக துணைச் செயலாளர். மாநில மாணவர் அணியின் இணை அமைப்பாளராக பொறுப்புவகித்துள்ளார். 1984 இல் கோவை மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவின் முதல் பொறுப்பாளர் ஆனார். ஈரோடு ஒரே மாவட்டமாக இணைக்கப்பட்ட பின்பு, தொடர்ச்சியாக மூன்று முறை மாவட்டச் செயலாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1979 இல் கலைஞர் தலைமையில் ஈரோட்டில் இவரது திருமணம் நடைபெற்றது.

1993ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது, அவருடன் சென்ற திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவர். மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்துவந்த கணேசமூர்த்தி, அதன்பின்பு மதிமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு மொடக்குறிச்சி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 1998இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பழனி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வெள்ளக்கோயில் சட்டமன்ற தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவிய அவர், 2009 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் வெற்றிபெற்றார். 2014இல் மீண்டும் ஈரோட்டில் போட்டியிட்ட கணேசமூர்த்தி, 2,55,432 வாக்குகள் பெற்று திமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்தார். இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share