ஈரானியரைப் பாராட்டும் இந்தியர்கள்: காரணம் என்ன?

Published On:

| By Balaji

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று, கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கதையாக இந்தியாவின் பதக்க வாய்ப்புகள் அனைத்தும் எட்டாக்கனியாகின. 15 வயது சிறுவனிடமிருந்து இந்தியா நேற்று பதக்க வேட்டையைத் தொடங்கியது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவருக்கான டபுள் ட்ராப் பிரிவில் கலந்துகொண்ட ஷர்துல் விஹான், 73 புள்ளிகள் பெற்று 1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தார். இருப்பினும் வெள்ளிப் பதக்கத்தை பெற்று ஆறுதல் அளித்தார்.

இந்தியாவின் சூர்யா பானு பிரதாப் – ஈரானின் இர்ஃபான் அஹங்காரியன் பங்கேற்ற உஷூ போட்டியின் 60 கிலோ பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போட்டியின் இடையில் இந்திய வீரர் பிரதாப்புக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இருப்பினும் தொடர்ந்து விளையாடி கடைசிவரை போராடி 0-2 என இர்ஃபானிடம் தோற்றார்.

ஆட்டத்தின் முடிவில் வெற்றியாளரை அறிவிக்க நடுவர் இருவரையும் அழைத்தார். ஒற்றைக் காலில் தடுமாறிய படியே பிரதாப் அங்கு வந்தார். நடுவர் வெற்றியாளரின் கையை உயர்த்திப் பிடித்துக் காட்டிய மறு நிமிடம் ஈரானிய வீரர் பிரதாப்பிடம் சென்று அவரை தூக்கத் தொடங்கினார். சற்றுதூரம் பிரதாப்பைச் சுமந்து சென்ற இர்ஃபான், இந்திய பயிற்சியாளரிடம் அவரை ஒப்படைத்துவிட்டு அவரது கழுத்தில் முத்தமிட்டுத் திரும்பினார். இது ஒரு விளையாட்டு என்பதையெல்லாம் தாண்டி மனிதம்தான் சிறந்தது என்பதை தன் செயலின் மூலம் உலகுக்கு உணர்த்தினார் அந்த ஈரானியர். பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல் இந்திய மக்களின் மனங்களையும் வென்ற அந்த ஈரானியருக்குத் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிரதாப்புடன் சேர்த்து உஷூ போட்டியில் இந்தியா சார்பில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த ரூஷிபினி தேவி, சந்தோஷ் குமார், நரேந்திர கெர்வால் ஆகிய நால்வரும் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் இந்தியாவுக்கு 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

நேற்றைய ஐந்தாம் நாள் முடிவில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட 18 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share