’அண்ணா அங்கே கொடியில் பறக்கிறார். இங்கேதான் கொடிகட்டிப் பறக்கிறார்’ என்பது அறிவாலயத்தில் நடந்த ஒரு கவியரங்கத்தில் கவிஞர் வாலி வடித்த வரி. வாலி மறைந்துவிட்டாலும் அவரது வரிகள் மறையவில்லை.
ஆம். பேரறிஞர் அண்ணாவின் 49ஆவது நினைவுநாளான இன்றைக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமைதி ஊர்வலம் போய் அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்துகின்றன. பெயரிலேயே அண்ணாவை தாங்கியிருக்கும் அதிமுக, அண்ணா நினைவுதினத்தில் ஆலயங்களில் அன்னதான சமபந்தி விருந்து நடத்தியிருக்கிறது.
இன்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீரும் கோயில்களில் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டனர். சென்னை கே.கே.நகர் விநாயகர் கோயிலில் எடப்பாடி பழனிசாமி உணவு அருந்தினார். ஓ.பன்னீர் செல்வம் திருவான்மியூர் மருந்தீஸ்வர் கோயிலில் சென்று சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டார். அண்ணா அசைவமும் சாப்பிடுவார், அவரது நினைவு தினத்தன்று கோயிலில் சென்று இப்படி சைவம் சாப்பிடுகிறார்களே என்று அதிமுகவிலேயே சிலர் முணுமுணுத்தனர்.
அண்ணா நினைவிடத்தையே கோயிலாக்கியது ஒருபக்கம் என்றால், அண்ணாவின் பெயரைச் சொல்லித் தமிழகத் திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டிருப்பது வினோதமாக உள்ளது.
இதுபற்றி அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவரும் திராவிட இயக்க ஆய்வாளரும், மூத்த திமுக தலைவர்களில் ஒருவருமான திருநாவுக்கரசுவிடம் பேசினோம். தமிழக அரசு அண்ணா நினைவுதினத்தை அனுசரித்த முறை பற்றிக் கருத்துக் கேட்டபோது சிரித்தார். பின்,
“அதிமுகவினர் திரிபுவாதிகள்தானே… அதனால் அவர்கள் அண்ணாவுக்காகக் கோயில்களுக்குதான் செல்வார்கள். அவர்களுக்கு அண்ணாவின் பகுத்தறிவு பற்றியெல்லாம் தெரியாது. அவர்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கட்சிக்கு வந்தவர்கள். அண்ணாவை முழுமையாகப் புரிந்துகொள்பவர்கள்தான் அவர் எப்பேற்பட்ட பகுத்தறிவுவாதி என்பதை உணர்வார்கள். அண்ணாவை எப்படிப் புரிந்துகொண்டார்களோ அதுமாதிரி இவர்களின் நடவடிக்கை இருக்கிறது. அண்ணாவை இவர்கள் புரிந்துகொண்டது இவ்வளவுதான்’’ என்றார் திருநாவுக்கரசு.
இதற்கிடையில் புதுக்கோட்டை டவுனில் இருக்கும் அண்ணா சிலைக்கு திமுகவினரும், அதிமுகவினரும் அடுத்தடுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றனர். அப்போது முதலில் வந்த திமுகவினர் அண்ணா சிலையின் உள்ளங்கைப் பகுதியில் திமுக கொடியை பொருத்திவிட்டுச் சென்றுவிட்டனர். பின்னாலேயே வந்த அதிமுகவினர் தங்கள் பங்குக்கு அண்ணாவின் கையில் அதிமுகவின் கொடியையும் திணித்துவிட்டுச் சென்றனர். இரண்டு கொடிகளுடன் அண்ணா புதுக்கோட்டையில் நின்றதைப் பார்த்த பத்திரிகையாளர்கள், அண்ணாவின் நிலையைப் பார்த்து அதை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
�,”