இழப்பைச் சந்திக்கும் போக்குவரத்துக் கழகங்கள்!

public

டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்து கழகம் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மீட்டெடுக்க முடியாத கடனில் போக்குவரத்துக் கழகங்கள் மூழ்கும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(ஜூன் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கண்டித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஊழலும், முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் நிலையில் அவற்றைச் சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாறாக போக்குவரத்துக் கட்டணங்களை 67% வரை உயர்த்தியது. அன்றாடம் பயணிக்கக் கூடிய 30 லட்சத்துக்கும் கூடுதலான பயணிகள் வேறு போக்குவரத்து முறைகளுக்கு மாறினர். இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு, கட்டண உயர்வுக்குப் பின்னர், ரூ.38 கோடி வரை கிடைக்க வேண்டிய தினசரி வருவாய் ரூ.28 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால், பேருந்துக் கட்டண உயர்வின் காரணமாக அதேநேரத்தில் பேருந்துக் கட்டண உயர்வைக் காரணம் காட்டி, அதுவரை அளித்து வந்த டீசல் மானியத்தை அரசு நிறுத்திவிட்டதால், கட்டண உயர்வுக்குப் பிறகும் பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கச் செலவு தினமும் ரூ.6 கோடி அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு மேலும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ள ராமதாஸ், “ மற்றொருபுறம் போக்குவரத்துக் கழகங்களின் மோசமான நிதிநிலை காரணமாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்கப்படவில்லை. நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகையின் அளவு ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால் போக்குவரத்துக் கழகங்கள் மீட்டெடுக்க முடியாத அளவுக்குக் கடனில் மூழ்கி விடும் ஆபத்து உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் எனப்படுபவை சேவை நோக்கத்துடன் நடத்தப்படுபவை என்று தெரிவித்துள்ள அவர், “தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மூலம் வருவாய் கிடைக்காது என்பதாலும், பல்வேறு பிரிவினருக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பையும், டீசல் கட்டண உயர்வால் ஏற்படும் இழப்புகளையும் தமிழக அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதைத் தடுப்பதற்காக டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய அரசு முன்வர வேண்டும். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *