இழந்ததை மீட்கும் இளவரசன், டிஸ்னியையும் மீட்பானா?

Published On:

| By Balaji

விமர்சனம்: தி லயன் கிங்

கைகளால் வரையப்பட்ட வால்ட் டிஸ்னியின் பாரம்பரிய அனிமேஷனான *தி லயன் கிங்* (1994), போட்டோ ரியலிஸ்டிக் எனும் அதிநவீன அனிமேஷன் தொழில் நுட்பத்தில் தற்போது மறு உருவாக்கமாக அதே பெயரில் வெளியாகியிருக்கிறது.

**கதை**

ஆப்பிரிக்காவின் காட்டு ராஜா முபாசாவுக்கு, சிம்பா என்ற இளவரசன் பிறக்கிறான். சிம்பா வளர்ந்தவுடன் அடுத்த ராஜாவாக பதவியேற்பான் என ராஜா அறிவிக்கிறார். இதனால் ஏமாற்றமடைந்த முபாசாவின் தம்பியான ஸ்கார், பதவியை அடைவதற்காக சதி செய்து முபாசாவைக் கொல்கிறான். சிம்பாவை தன் தந்தையைத் தானே கொன்றதாக நம்பவைத்து காட்டை விட்டும் விரட்டுகிறான் ஸ்கார். தந்தையைக் கொன்ற குற்றவுணர்ச்சியுடன் காட்டை விட்டு வெளியேறும் சிம்பா மீண்டும் தன் காட்டை மீட்டெடுத்தானா, தந்தையைக் கொன்ற சித்தப்பாவைப் பழி வாங்கினானா என்பதே மீதிக் கதை.

கதை என்று பார்த்தால் *தி லயன் கிங்* படத்தின் அதே கதைதான். அதன் சாரமான ‘வாழ்க்கை என்பது ஒரு வட்டம்’ என்ற அழியாத தத்துவம் இன்றைக்கும் என்றைக்குமாகப் பொருந்தக்கூடிய உண்மையே. அதுதான் *தி லயன் கிங்கை* கிளாசிக்காக இன்றும் கொண்டாட வைக்கிறது.

படம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களுக்குள்ளேயே காட்சி ரீதியான அழகியலாலும் அது ஏற்படுத்தும் அனுபவங்களாலும் நம்மை உள்ளிழுக்கிறது புதிய லயன் கிங். காட்சிகள், அவை கொடுக்கும் அனுபவம் ஆகியவற்றைப் பார்க்கும்போது டிஸ்னியின் சமீபத்திய வரவுகளை விடவும் மிகச் சிறப்பாகவே வந்துள்ளது இந்தப் புதிய வரவு. நாம் பார்ப்பது அனைத்தும் உண்மையே என நம்பும் அளவுக்குத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கிளையில் ஊறும் எறும்புகள் முதல் பரந்த நிலப்பரப்பில் எழும் சூரியன் வரை உழைப்பைப் பன்மடங்காகக் கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். போட்டோ ரியலிஸ்டிக் எனும் அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தில் வெளிவந்த ஆகச்சிறந்த படங்களுள் ஒன்றாக தி லயன் கிங் கொண்டாடப்படுவது உறுதி.

**தமிழ் டப்பிங்**

தமிழ் டப்பிங்கில் நடிகர்களின் குரல் தேர்வு கச்சிதமாக அமைந்துள்ளது. முபாசாவுக்கு பி.ரவிசங்கர் குரலும் ஸ்காருக்கு அரவிந்த்சாமியின் குரலும் பொருத்தமாக இருக்கிறது. சிம்பவாவுக்கு சித்தார்த்தும், நலாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷும் குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால், அவை குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதையும் தாண்டி மனத்துக்குள் செல்லத் தவறுகிறது. ஜசூ என்ற பறவைக்கு மனோ பாலா, குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான டிமோனுக்கு சிங்கம் புலி, பும்பாவுக்கு ரோபோ சங்கர் குரல் கொடுத்துள்ளனர். பிரதான கதாபாத்திரங்களைவிட நம்மை அதிகம் ரசிக்கவைப்பது இவர்களது குரலே. தமிழ் வசனமும் (மதன் கார்க்கி) அதற்கேற்றார் போல பொருத்தமாக அமைய சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள் இவர்கள் அனைவரும்.

**ஒரு படமாக தி லயன் கிங்?**

ஏமாற்றம் தான். காட்சிக்குக் காட்சி பழைய *லயன் கிங்* படத்தை அப்படியே எடுத்துள்ளதால் புதிதாக வியப்பதற்கு விஷுவலைத் தவிர இந்தப் படத்தில் எதுவுமில்லை. அது புதிய லயன் கிங்கின் பெரும் பலவீனமே. அதனால், திரைப்படம் முடியும் தருணத்தில் அயர்ச்சியே மிஞ்சுகிறது. டிஸ்னியின் *தி ஜங்கிள் புக்* படத்தை மறு உருவாக்கம் செய்த ஜான் பெவ்ரோ *(Jon Favreau)* தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். சென்ற படத்தைப் போலவே தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக பங்களித்த ஜான், பழைய கிளாஸிக்குகளில் இருந்த உணர்வைக் கடத்துவதற்குத் தவறியுள்ளார். ஒரு படைப்பாளியாக அவரது பார்வையோ, உள்ளீடுகளோ இன்றி *தி லயன் கிங்கை* மிகப் பாதுகாப்பாக ரீமேக் செய்திருக்கிறார். டிஸ்னியும் இந்தப் பாதுகாப்பான விளையாட்டைத்தான் விரும்புகிறது. அதனால்தான் தொடர்ச்சியாகத் தனது கிளாஸிக் கார்டூன் அனிமேஷன் படங்களை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறது.

சமீப வருடங்களில் டிஸ்னியின் மறு உருவாக்கமாக வந்த *சின்ட்ரெல்லா*, *பியூட்டி அன் தி பீஸ்ட்*, *அலாதீன்* ஆகியவை அதன் பழைய பெயர்களை வைத்தே ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கின்றன. இவை அனைத்துமே மியூசிக்கல் டிராமா என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய *லயன் கிங்* படத்தைப் பார்க்கும்போதே பார்வையாளனுக்குள் எழும் கற்பனையும், கதையின் ஓட்டத்தில் கிடைக்கும் அமைதியும், சிம்பாவாக நம் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்த மேஜிக்கும் புதிய லயன் கிங்கில் அறவே இல்லை.

எளிமையும் ஆன்மாவும் இல்லாத பிரம்மாண்டமான எலும்புக்கூடாக வந்திருக்கிறது புதிய லயன் கிங்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share