இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 28
ஆசிஃபா
சில நேரங்களில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் அல்லது சிந்தனைகள், குறிப்பாக குழப்பங்கள், நமக்கு மட்டுமே ஏற்படும் என்று நினைப்போம். “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?”, என்ற கேள்வி பல முறை எழுந்திருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லோருமே இந்த கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்!
இப்படி நாம் ‘தனியாக இருக்கிறோம்’ என்று நினைத்து எதிர்கொள்ளும் முக்கியமான ஒரு பிரச்சினை அதிகமாக யோசிப்பது (Overthinking). எழுதுவதற்கோ, வேலைக்காகவோ யோசிப்பதைச் சொல்லவில்லை. காரணமே இல்லாமல் யோசிக்கிறோம் இல்லையா அதைச் சொல்கிறேன். இந்த யோசனை நம்மை எங்கெல்லாமோ இழுத்துச் சென்று கடைசியில் ‘என்ன வாழ்க்கை இது?’ என்று விரக்தியடைவதுவரை கொண்டுபோய்விடும்.
ஒரு சிறு சொல், கேள்வி, சம்பவம், புகைப்படம், காட்சி ஆகியவை தொடர்பில்லாத எண்ணங்களை எல்லாம் வரவழைத்துவிடுகின்றன. நேற்று முழுவதும் எனக்கு அப்படித்தான் ஒன்றுமேயில்லாத நாளாகப் போனது. நான் பார்த்தது கறுப்பு நிறத்திலான கடற்கரையின் புகைப்படத்தை. ‘அந்த இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும்’ என்று நினைத்ததில் ஆரம்பித்தது, ‘நம்ம வாழ்க்கையே போச்சு. இனிமே எதுக்கு வாழணும்’ என்ற எண்ணத்தில் முடிந்தது. ஏறத்தாழ மூன்று மணி நேரங்களுக்கும் அதிகமாக யோசித்ததில், என் வாழ்க்கையே முடிந்து போய்விட்டதாக உணர்ந்தேன்.
இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. ஒரு நாய்க்குட்டியைப் பார்ப்பதாகட்டும், டிவி பார்ப்பதாகட்டும், எங்கோ தொடங்கும் எண்ணம் வேறு ஏதோ ஒரு திசையில் சென்று முடியும்.
என்ன காரணம்?
சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், சில கணிப்புகள் உள்ளன. நான் எப்படியான சூழல்களில் அதிகமாகச் சிந்திக்கிறேன் என்பதைக் குறித்து வைப்பதாலும், என் நண்பர்களிடம் கேட்டதிலும் தெரியவந்த பொதுவான சில காரணங்கள் இவை:
· நமக்குப் பிடித்த எதையுமே செய்யாமல் இருக்கும்போது.
· பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும்போது.
· எதிர்காலம் குறித்த பயம் தோன்றும்போது.
· நமக்குப் பிடிக்காத சூழலில் இருக்கும்போது.
இவை தவிரப் பல காரணங்கள் இருக்கலாம்.
பலரிடம் இதைச் சொல்லும்போது, “யோசிக்காத!”, என்ற ஒற்றை வார்த்தையைத்தான் தீர்வாகச் சொல்கிறார்கள். அதிகமாக யோசிப்பது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. ஒரு இடத்தில் நிற்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ரஜினி படங்களில் அவரைத் தாக்க வரும் ரவுடிகள் போல நம்மையும் சிலர் சூழ்கிறார்கள். முதல் நபர் பேசும்போதே இரண்டாவது நபரும் பேசுகிறார். இருவருக்கும் பதில் சொல்வதற்குள் மூன்றாவது ஆள். இவருக்குச் சொல்வதற்குள் அடுத்தவர் என்று ஒரு நூறு பேரிடம் ஒரே நேரத்தில் பேசினால் எப்படி இருக்கும்?
இதுதான் மூளைக்குள் நடக்கிறது!
இதில் சிக்கல் என்னவென்றால், நம் மூளையில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் சமமான கவனிப்பை நாம் வழங்குவதுதான். எந்தச் சிந்தனை நமக்குத் தேவை, எது தேவையில்லை என்று பிரித்தறிந்துவிட்டாலே பாதிப் பிரச்சினை இல்லாமல் போகும். அதை எப்படிச் செய்வது?
ஒரு எண்ணம் நம் வேலைக்கோ, அந்த நாளிற்கோ தேவைப்பட்டால் அதைப் பற்றி யோசிக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கதை எழுதுவதற்கு ஐடியா கிடைத்திருக்கிறது என்றாலோ, ஆய்வு செய்ய கான்செப்ட் கிடைத்தாலோ அதைக் குறித்து வைத்துக்கொண்டு சிந்திக்கலாம். கையில் இருக்கும் ஒரு வேலை, சவால், பிரச்சினை பற்றி என்றால் யோசிக்கலாம்.
ஆனால், பெரிதாகக் காரணம் எதுவும் எல்லாமல் மிக நீண்ட எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளோ, நிகழ் உலகில் நடக்க சாத்தியமில்லாத எண்ணமோ (“திடீரென்று நாயாக மாறிவிட்டால் எப்படி வாழ்வோம்?” ரக எண்ணங்கள்!) வந்தால், அவற்றை உதறிவிடுவது நல்லது.
அறிவுரை சொல்வது எளிதுதான், நடைமுறையில் சாத்தியமா என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு வீடியோவில், overthinkingஐக் குறைக்க டைரி வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்காள். அந்த ஆலோசனை எனக்கு ஓரளவு செட் ஆகிறது. எப்போதெல்லாம் ஒரு எண்ணம் வருகிறதோ அதைக் குறித்து வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் எண்ணங்களைக் குறிக்கும்போது, நமக்கே தெரியும் எது தேவை, தேவையில்லை என்பது.
Thought spiral என்ற எண்ணச் சுழல் பலருக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. என்னால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை என்று இரவு 2 மணிக்கு எனக்கு ஃபோன் செய்து அழுத தோழி ஒருத்தி இருக்கிறாள். எதற்கெடுத்தாலும் அதிகமாகச் சிந்திப்பதுதான் அனைத்து விஷயங்களையும் சிக்கலாக்குவதற்கான முதல் படி.
முடிந்தவரையில், நம் எண்ணங்களை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிக்கலாம்!
[கொஞ்சம் விலகலும் தேவை!](https://minnambalam.com/k/2019/03/14/11)
�,