இளைய நிலா: இளைஞர்களின் உறவுகளில் ஏன் இந்தச் சிக்கல்?

public

ஆசிஃபா

என்னுடைய தோழி ஒருத்தி, நேற்று ஒரு லிங்க்கை அனுப்பி, அதை விளையாடச் சொன்னாள்.

‘என்னைப் பற்றி எவ்வளவு உங்களுக்குத் தெரியும்? நீங்கள் என்னுடைய டாப் 3 நண்பர்களில் ஒருவரா?’ என்பதுதான் விளையாட்டு. ஒரு படிவம் மாதிரி, பத்துக் கேள்விகளைக் கொண்ட விளையாட்டு.

அதில் ஒரு கேள்வி, “உங்கள் பிரச்சினைகளை நீங்கள் யாரிடம் பகிர்ந்துகொள்வீர்கள்?”. காதலர் – அப்பா / அம்மா – நண்பர்கள் – சகோதரன் / சகோதரி என்பதுதான் விடை.

நான் பத்து முதல் பதினைந்து பேருடன் இணைந்து இந்தப் படிவத்தை நிரப்பியிருப்பேன். ஒருவர்கூட அப்பா / அம்மா என்பதைத் தேர்வு செய்யவில்லை, நான் உட்பட. என்ன காரணம்?

குறிப்பிட்ட ஒரு காலத்துக்குப் பிறகு, நமக்கும் நம் பெற்றோருக்கும் இடையில் பிளவு ஏற்படுகிறது. பிளவு என்பது சண்டை போடுவது, பேசாமல் இருப்பது, வாக்குவாதம் ஏற்படுவது போன்ற சராசரியான விஷயங்களைக் குறிக்கவில்லை. மனோரீதியான இடைவெளி உருவாகிறது. நம் தலைமுறையினரின் பல பிரச்சினைகளைப் பெற்றோரால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதைத் தலைமுறை இடைவெளி என்று சொல்லலாமா எனத் தெரியவில்லை.

நமக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பெற்றோரிடம் ஏன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை? “என் வாழ்க்கையில் நான் என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை” என்று நம் அம்மாவிடம் நம்மால் ஏன் சொல்ல முடியவில்லை?

காரணம், ஒன்றுதான். அவர்களின் சிந்தனைகள் வேறு காலத்தியவை. நல்ல மதிப்பெண், அதைத் தொடர்ந்து நல்ல வேலை, திருமணம், குழந்தைகள் என்பதையே ‘சிறந்த’ வாழ்க்கையாகக் கருதும் பெற்றோர், நம் எண்ணங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர்.

அவர்களுக்குப் புரிதலில் சிக்கல் என்றால், நமக்குப் பேசுவதில் சிக்கல்.

“நான் நன்றாக டெக்ஸ்ட் செய்வேன். ஆனால், பேச வராது” என்பதுதான் பலரின் நிலை. இப்படியிருக்க நம்மால் நம் பிரச்சினைகளை, சிந்தனைகளைக் கோவையாக நம் பெற்றோர் முன் தெளிவாக முன்வைக்க முடியவில்லை. நம் பேச்சிலுள்ள குழப்பம் அவர்களை பயம் கொள்ளச் செய்கிறது. அவர்கள் பயத்தைக் கண்டு, அடுத்த முறை நாம் பேச மாட்டோம்.

இப்படித்தான் கம்யூனிகேஷன் கேப் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இந்த இடைவெளி நமக்கு மென்மேலும் உளைச்சலை உருவாக்குகிறது. இதை எப்படி தீர்க்கலாம்?

ஒரே ஒரு வழிதான். பேசுவது. எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் பற்றிப் பேசி முடித்துவிட முடியாது. சின்னச் சின்ன விஷயத்திலிருந்து தொடங்கலாம். மேலை நாடுகளில் இப்போது உள்ள ஒரு பரவலான பழக்கத்தை நாமும் முயற்சி செய்யலாம். ஒரு நாள் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம், மொபைல், கம்ப்யூட்டர், டிவி என அனைத்துத் தொழில்நுட்பங்களிலிருந்தும் தங்களை அவர்கள் விடுவித்துக்கொள்கிறார்கள்.

அப்படி விடுவித்துக்கொண்டு என்ன செய்கிறார்கள்? உரையாடுகிறார்கள். இந்த நேரத்தை மனம்விட்டுப் பேசப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சிலர், படுக்கையறை, சாப்பாட்டு அறைக்குள் மொபைல் கொண்டு செல்ல மாட்டார்கள். அங்கே வெறும் பேச்சுதான். கையகலத் திரையோ 24 அங்குலத் திரையோ கிடையாது.

இப்படி நாம் எதாவது ஒன்று செய்யலாம். உரையாடலே நம்மைப் பிணைக்கும் ஒரே வழி.

பேச்சே மருந்து, பேச்சே நம்மை இணைக்கும் கயிறு.

உரையாடத் தொடங்கலாமா?

(அடுத்த பகுதி வரும் வியாழன் அன்று…)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0