இளையராஜா-வைரமுத்து: மீண்டும் நேருக்கு நேர் மோதல்!

Published On:

| By Balaji

திரைத்துறையில் பாடகி பி .சுசீலா பணியாற்ற வந்து 65 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, அவரை சிறப்பிக்கும் வகையில் ‘சுசீலா 65’ என்ற பெயரில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு பி.சுசீலாவின் பெருமைகளை பேசினர். அதில் கலந்துகொள்ள இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு இருவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. நீண்ட காலங்களுக்குப் பிறகு இருவரும் ஒரே விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இருவரும் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

முதலில் சுசீலாவை வாழ்த்திப் பேசிய இசைஞானி இளையராஜா, மாலை பொழுதின் மயக்கத்திலே பாடலை பாடி, “இன்றைய இளைஞர்களுக்கும் இந்த பாடல் வரிகள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், கவிஞர் கண்ணதாசனைப் போல உலகத்தில் ஒரு கவிஞன் கிடையவே கிடையாது. கவிஞரை போல பாடலைச் சொன்னவுடன் வரிகளைச் சொல்லக்கூடியவர்கள் உலகத்தில் ஒருவரும் கிடையாது. கண்ணதாசனின் புகழ் ஓங்கும் வகையில் சுசீலா அந்த பாடலைப் பாடி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்” என்று தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்துவை சீண்டும் வகையில், கண்ணதாசனை சிறந்த கவிஞர் என்று இளையராஜா பேசியபோது, வைரமுத்து தலையை கீழே குனிந்தபடியும், அவருடைய பேச்சைக் கேட்காதது போலும் அமர்ந்திருந்தார்.

அதன்பிறகு சுசீலாவை வாழ்த்திப் பேசிய வைரமுத்து, “தனது உச்சரிப்பின் தெளிவில் ஒரு மொழியின் பரிமாணத்தை உண்டாக்குவதில் சுசீலாவுக்கு இணையாக வேறு யாரையுமே கருத முடியாது. பேசும்போது எளிமையாக இருக்கும் சுசீலாவின் குரல் பாடும்போது தேவதையாக மாறிவிடுகிறது. சுசீலாவின் கணவர் டாக்டர் மோகன் இறந்து முதலாமாண்டு நினைவஞ்சலி வரும் சமயத்தில், சுசீலா எனது வீட்டுக்கு வந்தார். கணவருக்கு நினைவஞ்சலி எழுதித் தரும்படி கேட்டார். எழுதிக்கொடுத்தேன். அது என்னுடைய வரியல்ல, கண்ணதாசன் வரிகள்.

உலகில் சிறந்த கவிஞர் கண்ணதாசன் என்பதில் எங்களுக்கும் வேறுபாடு இல்லை. உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடும் இல்லை. அந்த மொழியோடும் வாழ்வோடும் அவர் கொண்டுவந்து கொடுத்ததை எல்லாம் சுசீலாவின் குரல் , தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது” என்று கூறினார். இது இளையராஜா கூறியதற்கு பதிலடி அளிக்கும் விதமாகவே அமைந்தது.

இளையராஜா இசையமைப்பில் உருவான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. அதனைத் தொடர்ந்து, இளையராஜா-வைரமுத்து வெற்றிக் கூட்டணியில் பல பாடல்கள் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டன. ஒருகட்டத்தில் மனக் கசப்பு ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பணியாற்றுவதை நிறுத்திக்கொண்டனர். விஜயகாந்த் நடிப்பில் மனோபாலா இயக்கிய ‘சிறைப்பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ என்ற பாடல்தான் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து உருவாக்கிய கடைசி பாடல். அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share