பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். வரும் 2018 ம் ஆண்டு வேட்டி, சேலை நெய்வதற்கான நூல் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் 22 ம் தேதி டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இந்திய அளவில் கோரப்பட்ட இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கழிவுநீரை வெளியேற்றவில்லை எனச் சான்றிதழ் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 15 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் கழிவுநீரை வெளியேற்றவில்லை எனச் சான்றிதழ் கொண்ட சாயக் கழிவு ஆலைகள் மற்றும் நூற்பாலைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.
இதனை எதிர்த்து, விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ராம் நூற்பாலை மில் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெண்டர் விதிகளின்படி, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும். 50 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள டெண்டரை இந்திய வர்த்தகப் பத்திரிக்கையில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், 450 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் குறித்து அந்தப் பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியிடவில்லை. எங்களது நிறுவனம் சாயமேற்றுவதற்காக மும்பையில் உள்ள நூற்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் சாயக்கழிவு நீர் கடலில் கலக்க அனுமதி உள்ளது. நூல் கொள்முதல் செய்வதற்கு புதிய டெண்டர் விட உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 7ஆம் தேதி நீதிபதி எம்.துரை சாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘ஜூலை 13ஆம் தேதி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதல் டெண்டரை இறுதி செய்ய தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இன்று (ஆகஸ்ட் ,12) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி , ‘இலவச வேட்டி சேலை திட்ட ஒப்பந்தத்தில் விதிகளைப் பின்பற்றவில்லை. எனவே, 2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான தமிழக அரசின் இலவச வேட்டி சேலை டெண்டரை ரத்து செய்யப்படுகிறது உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்டத்தின் கீழ் புதிய டெண்டர் கோர அரசுக்கு அனுமதியளிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.�,