கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பினால் உலகம் முழுவதும் அதிர்ச்சி பரவியது. இதில் 258 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் இறந்தவர்களை ஓவியங்களாகத் தீட்டி, அவர்கள் குறித்த நினைவுகளை உயிர்ப்பித்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த ஓவியர் தஹிரா ரிஃபாத்.
ஒரு சோகத்தில் சமூகம் சிக்கினால், அதன் வெளிப்பாடு மக்களின் பயமாகவும் கோபமாகவும் தெரியவரும். குண்டுவெடிப்பினால் இலங்கையிலும் இதுதான் நிகழ்ந்தது. இதனைக் கண்ட கிராஃபிக் டிசைனர் தஹிரா ரிஃபாத் எனும் பெண்ணின் மனதில், குண்டுவெடிப்பில் பலியான 258 பேர் குறித்த நினைவுகளை மீட்டெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தை விதைத்தது.
தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தன்னைப் பெரிதும் பாதித்தது என்று கூறியுள்ளார் ரிஃபாத். “ட்விட்டரை திறந்தால், சில மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதையும், வெவ்வேறு விஷயங்களுக்காகப் பிறர் மீது குற்றம்சாட்டுவதையும் பார்த்தேன். இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி அதிர்ச்சியடைந்திருப்பார்கள் என அதிகாலை 7 மணி வரை தூங்காமல் எண்ணிக் கொண்டிருந்தேன்” என்று தெரிவித்துள்ளார் ரிஃபாத்.
அதன் தொடர்ச்சியாக, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களது உருவப்படங்களை வரைவது எனும் பணியை ரிஃபாத் மேற்கொண்டுள்ளார்.
குண்டுவெடிப்பில் பலியான ரமேஷ் ராஜூ என்பவரது ஓவியத்தை முதலில் வரைந்துள்ளார். 40 வயதான ரமேஷ், 2 குழந்தைகளின் தந்தை. மட்டக்களப்பு சியோன் சர்ச்சில் குண்டு வைக்க வந்தவரைத் தடுத்து, தன் குடும்பத்தை மட்டுமல்லாமல் பலரையும் காப்பாற்றியவர். “ரமேஷ் ராஜூ பற்றிய ஒரு கட்டுரைப் படித்தேன். அதில் அவரைப் பற்றிய தகவல் இருந்தது. அதனால், ஓவியம் வரையும் பணியை அவரிடமிருந்தே தொடங்கினேன். அந்த ஓவியத்தைப் பதிவிட்ட பிறகு பலரும் முன்வந்து, இறந்தவர்களின் தகவல்களைத் தந்தனர். அவர்களை அடுத்தடுத்து வரைய ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார் ரிஃபாத்.
ஃபேஸ்புக்கில் இருந்தும், இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மூலமும் தகவல்களைப் பெற்ற ரிஃபாத், ஒவ்வொரு ஓவியமாக வரைந்து ஃபேஸ்புக்கிலேயே வெளியிட்டுள்ளார்.
“முதல் ஓவியத்தை வரைந்தபோது, இந்த மனிதர் இனி இல்லை என்ற எண்ணம் என்னைத் தாக்கியது. அந்த துக்கத்தில் நான் மூழ்கிப்போனேன். அதுதான் என்னை என் பணியை நோக்கிச் செலுத்த உதவியது” என்று குறிப்பிட்டுள்ளார் ரிஃபாத். ஒவ்வொரு ஓவியத்தையும் வரைந்து முடித்ததும், அவர்கள் எனக்கு நன்கு தெரிந்தவர்களைப் போல இருப்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
“நியூசிலாந்து தாக்குதலின்போது அந்நாட்டு பிரதமர் குற்றவாளிக்குக் கவனம் கொடுக்கவில்லை. ஆனால், இலங்கை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளைப் பற்றி நிறைய கட்டுரைகள் அதிகம் பகிரப்பட்டன. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கட்டுரைகள் மிக சொற்பமாகவே வெளியாகின” என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ரிஃபாத்.�,