‘இலங்கை கடற்படையை முடக்கி வைப்பதே தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 17ஆம் தேதி நாகை மீனவர்கள் பத்து பேர் பருத்தித்துறை அருகே கடல்தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய நாளில் பத்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதேபோல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் நேற்று (நவம்பர் 19) கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக் கடற்படையின் கைது நடவடிக்கை தொடர்ந்து வருவது தமிழக மீனவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கைகள் குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக மீனவர்களின் பிரச்னையைத் தீர்க்க இலங்கை கடற்படையை முடக்குவதே சரியாக இருக்கும். மீனவர்களின் பிரச்னைக்கு அதுதான் தீர்வாக இருக்கும்” என்றார்.
இந்தியக் கடலோரக் காவல்படை தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் இந்தியக் கடற்படையினுடையது அல்ல என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கை கடற்படையை முடக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,