:இலங்கை: அடுத்த கட்டம்!

Published On:

| By Balaji

இலங்கையின் பிரதமர் ரனிலா, ராஜபக்‌ஷேவா என்ற அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில் இவர்கள் இருவருமில்லாமல், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரான சஜித் பதவியேற்கலாம் என்ற தகவல்கள் கொழும்பில் இருந்து சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் நவம்பர் 14 அன்று ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. நேற்று (நவம்பர் 15) அன்று இதுபற்றி கவலைப்படாமல் ராஜபக்‌ஷே தன்னை அதிபர்தான் நியமித்தார் என்று சொல்லிக்கொண்டு பிரதமர் இருக்கையில் அமர்ந்தார். அப்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் எம்.பி.க்கள் மோதிக்கொண்டனர். சபாநாயகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் கொழும்பு நகரை உலுக்கும் பேரணியை ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய பிறகு நேற்று மாலை அதிபர் சிறிசேனா முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் ராஜபக்‌ஷே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருமாறும், அதில் அதிபரின் நியமனம் அரசியல் சட்டத்துக்கு முரணானது என்ற முதல் பகுதியை நீக்கிவிடுமாறும் கோரிக்கை வைத்த அதிபர், இன்னொரு கோரிக்கையையும் அவர்களிடம் வைத்தார். அதாவது, ரனில் விக்ரமசிங்கேவுக்கு பதிலாக வேறு யாரையாவது பிரதமராக தேர்ந்தெடுங்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் சஜித் கூட பிரதமர் ஆகலாம் என்று சொல்லியுள்ளார்.

**தலைமை ஏற்கத் தயார்: சஜித்**

இந்த நிலையில் இதுவரை ரனில்தான் பிரதமர் நான் அந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்று கூறிவந்த சஜித் நேற்று, ‘ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் நான் முக்கியப் பதவியை ஏற்கவும் தயார்’ என்று அறிவித்திருக்கிறார்.

நேற்று கொழும்பில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரம்மாண்ட பேரணியில் பேசிய கட்சியின் துணைத் தலைவரும், ரனில் அமைச்சரவையில் அமைச்சருமான சஜித், “என்னை யார் என்று சிலர் கேட்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்கிறேன் ஜனநாயகத்துக்காகவும் மாண்புக்காகவும் நிற்கும் மனிதன் நான். என்னைப் பற்றி பல்வேறு தகவல்கள் மீடியாக்களில் உலவுகின்றன. அவை அனைத்தையும் நம்பாதீர்கள். நான் என் கையெழுத்தோடு புகைப்படத்தோடு வெளியிடும் செய்திகளை மட்டுமே நம்புங்கள்.

இப்போது சொல்கிறேன். ஜனநாயகத்தைக் காப்பாற்ற, நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முக்கியமான தலைமைப் பங்காற்றுவதற்கு நான் தயார். என் கட்சியின் ஆசியோடும், என் கட்சியின் செயற்குழுவின் ஆசியோடும்தான் நான் அதைச் செய்வேன்” என்று பேசினார்.

இதே சஜித் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, “என்னை பிரதமராகப் பதவியேற்கும்படி அதிபர் சிறிசேனா கேட்டிருந்தார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். என்னை இன்னொருமுறை அவர் அழைத்தாலும் நான் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன். என்னைப் பொறுத்தவரை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் தலைமையில் பணியாற்றவே விரும்புகிறேன். இப்போது தேவை நாட்டுக்கு ஜனநாயகமே தவிர எந்த நபர் பிரதமர் என்ற கேள்வியல்ல” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று சஜித் கொழும்பு பேரணியில் பேசும்போது, “தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்றால் கட்சியின் ஆசியோடு ஏற்பேன்” என்று பேசியிருப்பது அவர் பிரதமர் பொறுப்பை ஏற்க சம்மதித்துவிட்டாரோ என்ற யூகங்களை எழுப்பியது. இன்றும் சில ஊடகங்கள் நாட்டின் வருங்காலப் பிரதமர் என்று சஜித் பிரேமதாசாவை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டன.

1989 முதல் 93 வரை இலங்கையின் அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன் தான் இந்த சஜித் என்பது குறிப்பிடத் தக்கது.

**‘கத்தி’ எம்.பி மீது காவல் நிலையத்தில் புகார்**

இதற்கிடையில் நேற்று நாடாளுமன்றத்தில் கத்தியோடு வந்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான பலித தேவரப்பெருமா மீது நாடாளுமன்றக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இண்டிகா அனுராதா என்ற ராஜபக்‌ஷே ஆதரவு எம்.பி. கொடுத்திருக்கும் புகாரில், “கத்தியோடு எம்.பி. அவைக்குள் இருப்பது பற்றி சபாநாயகரிடம் சொல்லியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது வரிசையில் இருந்து சில வரிசை தள்ளிதான் ராஜபக்‌ஷே அமர்ந்திருக்கிறார். எனவே பலிதவை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

**சபாநாயகர் ஆலோசனை**

இதற்கிடையே இன்று (நவம்பர் 16) காலை 11.30க்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் இன்று கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியிருக்கிறது. நேற்று அதிபர் கூறியது போல ராஜபக்‌ஷே மீது புதிய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாமா என்பது பற்றியும் இன்று பிற்பகல் கூட இருக்கும் நாடாளுமன்றத்தின் அலுவல்கள் பற்றியும் அதில் விவாதிக்கப்படுகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share