இறுதிச் சடங்கை நிறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Balaji

திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க முடியாது என்றும் அவற்றில் சட்ட சிக்கல் இருப்பதாகவும், காந்தி மண்டபத்தில் 2ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். இவற்றில் ட்ராபிக் ராமசாமி தரப்பில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்திருந்தனர்.

நிலம் ஒதுக்குவதில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கலைஞரின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ட்ராபிக் ராமசாமி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 8) மனுத்தாக்கல் செய்தார். அவற்றில் “மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு தனக்கு தெரியாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளது. கருணாநிதியின் இறுதிச் சடங்கை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ கலைஞரின் இறுதிச் சடங்கை நிறுத்த முடியாது” என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய ட்ராபிக் ராமசாமியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment