அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள்மீது இந்திய அரசு சுமத்தி வரும் கூடுதல் வரியை குறைக்க, பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளது நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும்போது அண்டை நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் அதிபர் ட்ரம்ப். அதிலும், இந்தியாவும் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகமான இறக்குமதி வரி விதிப்பதை கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது இந்திய அரசு அதிகமான வரிகளை பல ஆண்டுகளாக விதித்து வருகிறது. இதே விஷயத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வெளிப்படையான வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா தாமாக முன்வந்து வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
இதுகுறித்து நேற்று(அக்டோபர் 1) அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிக வரி வசூலில் அரசனாக இருக்கும் இந்தியா நம்முடன் வர்த்தக பேச்சை தொடங்குவதற்கு விரும்புகிறது. இந்தியா வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. அவர்களாக என்னை தொடர்பு கொண்டு வரியை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளார்கள். நாங்கள் கூப்பிடவே இல்லை. இது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார். இதன் விளைவாக விரைவில் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரி விகிதம் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.�,