�
இருளர் மொழி தமிழ்நாட்டில் நீலகிரி, கேரளம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பழங்குடியின மக்களால் பேசப்படுகிறது. இந்த மொழியில் தற்போது முதன்முறையாகத் திரைப்படம் உருவாகிவருகிறது.
நேதாஜி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை விஜீஷ் மணி இயக்குகிறார். சுபாஷ் சந்திர போஸின் மர்ம மரணம் மற்றும் காந்திக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்குமான கருத்தியல் வேறுபாடுகளையும் மையமாகக்கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் பழங்குடியினத்தவராக நடிக்கும் ராஜேஷ் படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார். “இருளர் மொழியைப் பேசி எடுப்பது இதுவே முதன்முறையாகும். இம்மொழி தமிழ்மொழியுடன் நிறைய தொடர்புகொண்டுள்ளது. இந்தப் படத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன், மாஸ்டர் அலோக் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கோபாலன் சுபாஷ் சந்திர போஸின் தீவிர ரசிகராக இருக்கிறார். சுபாஷுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து பணியாற்றியதாக இவர் கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஐசக் தீவிர காந்தியவாதியாக நடிக்கிறார். நடிகர் ரோஜி மாவோயிஸ்ட்டாக நடிக்கிறார்” என்று கூறியுள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் அட்டபாடியின் காட்டுக்குள் படமாக்கப்படுகிறது. எம்.ஜே.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ஹரிகுமார் மாதவன் ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 13 நாள்களில் ஒலிப்பதிவுடன் நிறைவடைந்துள்ளது. கார்த்திகா வேண்டகா தயாரிக்கிறார்.�,